39 பந்துகளில் சதம்.. CSK பவுலிங்கை பொளந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் ஆர்யா.. PBKS இமாலய இலக்கு
சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இதன் மூலம் நடப்பு தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
சண்டிகாரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் ஆகியோர் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும்.

குறிப்பாக பிரியான்ஸ் ஆர்யா முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்சர் என 15 ரன்கள் பறக்க விட்டார். ஆனால் இரண்டாவது ஓவரின் வீசிய முகேஷ் சவுத்ரி, பிராப் சிம்ரன் சிங் விக்கெட்டை டக் அவுட் ஆக்கினார். இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒன்பது ரன்கள் எடுத்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
இந்த சூழலில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் ஒரே ஓவரில் நெஹல் வதரா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்த பஞ்சாப் அணி தடுமாறியது. எனினும் ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் பவுண்டரி, சிக்ஸர் என பிரியான்ஸ் ஆர்யா விரட்டினார். விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் டாப் கியரிலே ரன்களை குவித்து வந்தார்.
ஏழு பவுண்டரி, ஒன்பது சிக்ஸர் என விளாசி அவர் 39 பந்துகளில் சதம் அடித்தார். இதனால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பஞ்சாப் அணி 154 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் மட்டுமே தனியாளாக 103 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக சதம் அடித்தது சாதனையாக இன்னும் இருக்கின்றது. யூசுப் பதான் 37 பந்துகளிலும், டேவிட் மில்லர் 38 பந்துகளிலும், டிராவிஸ் ஹெட் 39 பந்துகளிலும் சதம் அடித்த நிலையில் தற்போது பிரியான்ஸ் ஆர்யா 39 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத எட்டாவது வீரர் ஒருவர் சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்த பிறகும் சிஎஸ்கே வீரர்கள் வழக்கம் போல் ஃபில்டிங்கை தவறவிட்டனர். ஷாசாங் சிங் 36 பந்துகளில் 52 ரன்களும், மார்கோ யான்சன் 19 பந்துகளில் 34 ரன்களும் அடித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கேக்கு அணி 2019ஆம் ஆண்டுக்கு பிறகு 180 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications