கவுகாத்தி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி மோதிய லீக் ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. சிஎஸ்கே அணி ஆர் சி பி இடம் அடைந்த தோல்வியால் ரசிகர்கள் மனவேதனையில் இருந்த நிலையில், ஒரே நாள் இடைவேளையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும் சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும் ஆட்டமிழக்க யாருமே எதிர்பாராத வகையில் நிதிஷ்ரானா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க சிம்ரன் ஹெட்மேயர் 16 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் பதிரானா, நூர் அகமது மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் அடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே மிகவும் சோகமாக அமைந்தது. ரச்சின் ரவீந்திரா நான்கு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.ராகுல் திருப்பாதி முதலில் தடுமாறினாலும், பின் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். பவர் பிளேவில் சிஎஸ்கே அணி 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனை அடுத்து கேப்டன் ருதுராஜ் தனி ஆளாக நின்று சிஎஸ்கே வின் வெற்றிக்காக போராடினார். impact வீரராக களம் இறங்கிய சிவம் துபே இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என பத்து பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். எனினும் முக்கியமான கட்டத்தில் சிவம் துபே ஆட்டம் இழக்க தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். அவர் ஒரு சிக்ஸர் அடித்த நிலையில் 9 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து ருதுராஜ் மற்றும் ஜடேஜா ஜோடி சிஎஸ்கே அணியை வெற்றி அருகே அழைத்துச் செல்லப் போராடியது. இந்த கட்டத்தில் தான் ருதுராஜ் 44 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஹசரங்கா பவுலிங்கில் ஆட்டம் இழந்தார்.இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை அடுத்து கடைசி இரண்டு ஓவரில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கில் தோனி, ஜடேஜா விளையாடினர். இதில் முதல் பந்தில் பவுண்டரி, நான்காவது பந்தில் சிக்ஸர் என தோனி பறக்க விட சிஎஸ்கே வின் வெற்றிக்கு ஏழு பந்துக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஜடஜா கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் சந்திப் சர்மா கடைசி ஓவரை வீசினார். இதில் முதல் பந்து வைடாக மாறியது. மீண்டும் முதல் பந்தை சந்திப் சர்மா வீச அதனை அடித்து ஆட முற்பட்ட தோனி பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் சிஎஸ்கே வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்க வெற்றிக்கு 3 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் நான்காவது பந்தில் ஜிம்மி ஓவர்டன் 6 விளாசினார். இதனால் சிஎஸ்கே வின் வெற்றிக்கு இரண்டு பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இது சிஎஸ்கே ரசிகர்களின் BPயை எகிற வைத்தது. எனினும் ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே வீரர்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. கடைசி இரண்டு பந்திலும் சிஎஸ்கே டபுள்ஸ் மட்டுமே ஓட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவர் பிளேவின் சிஎஸ்கே அணி ரன்கள் அடிக்காமல் விட்டது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.