கவுகாத்தி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. சிஎஸ்கே அணி இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட நிலையில் பேட்டிங் படும் மோசமாக இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக rcb அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்று இருக்கிறது. இதனால் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய வேண்டும் என்றால் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற தருணத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருதுராஜ், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் கடந்த போட்டியில் விளையாடியதை விட இந்த ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் சேஸ் செய்ய விரும்புகிறோம்.
தற்போது வரை நன்றாக தான் தொடர் இருக்கிறது. ஆனால் கடந்த போட்டிக்கும் இந்த போட்டிக்கும் கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் பங்கேற்கின்றோம். எனினும் ஐபிஎல் இயல்பே இதுதான். ஒவ்வொரு போட்டிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். சிஎஸ்கே அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது என்று நினைக்கின்றேன். ஆனால் எங்களுக்கு கூடியிருக்கும் ரசிகர்களை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எங்கள் அணியில் இன்று நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்திருக்கின்றோம். சாம் கரனுக்கு பதில் ஜெமி ஓவர்டனும் தீபக் ஹூடாவுக்கு பதில் விஜய் ஷங்கரையும் சேர்த்து இருக்கிறோம் என்று ருதுராஜ் கூறியுள்ளார். நியூசிலாந்து வீரர் கான்வே அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாற்றத்தை சிஎஸ்கே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பேசுகையில், நானும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன். இது என்னுடைய சொந்த ஊர். நான் இங்கு தான் பிறந்து வளர்ந்து இருக்கிறேன். இங்கு நான் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். என் மக்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்.
நாங்கள் இந்த தொடரில் சிறு சில பகுதியில் நன்றாக விளையாடினோம். எனினும் ஒருங்கிணைந்து நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியில் இன்றைய போட்டிக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை என்று ரியான் பராக் கூறியுள்ளார்.