IPL Date - ஐபிஎல் தேதி அறிவிப்பு.. 2 மாதம் ஹவுஸ்ஃபுல்.. எப்போது துவங்குகிறது? எத்தனை போட்டிகள்?
மும்பை: 2025 ஐபிஎல் தொடர் எப்போது துவங்குகிறது என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்து இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் 18வது ஐபிஎல் தொடர் துவங்கும் என அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் இடம் பெறும் எனவும் அவர் கூறி உள்ளார்.
2025 ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் எனவும் ராஜீவ் சுக்லா கூறி இருக்கிறார். சுமார் இரண்டு மாதங்கள் இந்திய கிரிக்கெட் மைதானங்கள் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக மார்ச் 23 முதல் 2025 ஐபிஎல் தொடர் துவங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று பல்வேறு விஷயங்களை பற்றி விவாதிக்க பிசிசிஐ கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது புதிய பிசிசிஐ செயலாளராக தேவஜித் சைக்கியா நியமிக்கப்பட்டார். அத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மகளிர் ஐபிஎல் தொடர் ஒரே நகரத்தில் நடத்தப்படும் நிலையில் 2025 மகளிர் ஐபிஎல் தொடரை எந்த நகரத்தில் நடத்தலாம் எனவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை போட்டிகள் நடத்தப்படும்? எப்போது துவங்கும்? எப்போது இறுதிப் போட்டி நடைபெறும்? என்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அது குறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
2025 ஐபிஎல் தொடரில் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. எப்போதும் ஐபிஎல் தொடரில் முந்தைய போட்டியை வென்ற அணியின் சொந்த மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்தப்படும். அதன்படி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.
2024 ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, எப்போதும் சிஎஸ்கே அணி முதலில் ஆடும் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் 2025 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு நாட்களில் சிஎஸ்கே அணி பங்கேற்கும் போட்டி இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications