கேஎல் ராகுல் வேண்டாம்.. ஸ்ரேயாஸ் ஐயரிடம் பேசுவோம்.. கேப்டன்சி ஆசையை காட்டி அழைக்கும் டெல்லி அணி!
மும்பை: கேகேஆர் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயருடன் டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே டெல்லி அணியுடன் பணியாற்றியுள்ள நிலையில், மீண்டும் கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட கேகேஆர் வீரர்களின் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனுக்கு கேகேஆர் அணி அவமரியாதை செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் பேசுகையில், எங்களின் ரீடென்ஷன் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் தான் முதலில் இருந்தது. ஆனால் ரீடென்ஷன் பட்டியல் அணி நிர்வாகங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. அந்த வீரரும் ஒப்புக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே போல் தனது மதிப்பை அறிய அந்த வீரரும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று கூறினார்.
இதன் மூலமாக கேகேஆர் அணியுடனான பேச்சுவார்த்தையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உடன்பாடு எட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் தனது திறமையை நிரூபித்திருப்பதால், மெகா ஏலத்தில் அவருக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லி அணியை நிர்வகிக்கும் ஜிஎம்ஆர் நிறுவன உரிமையாளர்கள் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சியை தருவதாகவும் வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அவர் டெல்லி அணியில் விளையாடி இருக்கிறார்.
2020ஆம் ஆண்டு டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு செல்ல காரணமாக அமைந்தவரும் ஸ்ரேயாஸ் ஐயர் தான். இதனால் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பெரிதாக எடுபட்டதில்லை. ஆனால் கேப்டனாக சிறப்பாக செயல்படக் கூடியவார்.
மெகா ஏலத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் வாங்குவதற்கு ஏராளமான அணிகள் தயக்கம் காட்டும் என்று பார்க்கப்படுகிறது. பஞ்சாப், லக்னோ, டெல்லி, குஜராத் உள்ளிட்ட அணிகள் மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் நிச்சயம் பெரிய தொகை கொடுத்து அவரை வாங்க தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications