டிராவிஸ் ஹெட் விளம்பரத்தை எதிர்த்து ஆர்சிபி வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் நடித்த விளம்பரம் ஒன்றுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரை முன்னிட்டு, முன்னணி கிரிக்கெட் வீரர்களை வைத்து பல்வேறு விளம்பரப் படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட், உபேர் மோட்டோ (Uber Moto) விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். உபேர் நிறுவனத்தில் பைக் டாக்ஸி ஓட்டுபவராக மற்றும் பொருட்களை விநியோகிப்பவராக டிராவிஸ் ஹெட் அந்த விளம்பரத்தில் நடித்திருந்தார்.

அந்த விளம்பரத்தின் ஒரு பகுதியில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு, பெங்களூரு மைதானத்தில் 'ராயலி சேலஞ்சுடு பெங்களூர்' என்ற வாசகத்தை பெயிண்ட் மூலம் எழுதுவதாக காண்பிக்கப்பட்டிருந்தது. அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக, அந்த அணியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விளம்பரதாரரான உபேர் நிறுவனம், ஆர்சிபி அணியின் பெயரை தங்களின் விளம்பரத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தி இருப்பதாகவும், அதை காப்புரிமை சட்டத்தின் கீழ் அனுமதிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.
ஆனால், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சௌரப் பானர்ஜி, "இது கிரிக்கெட் தொடர்பான வேடிக்கையான விளம்பரம் மட்டுமே. இந்த நிலையில் இந்த விளம்பரத்திற்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுகளில் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். இவற்றை நாம் இப்போது தடுத்து நிறுத்தினால், அந்த விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் பாதிக்கப்படும்" என்றார்.
உபேர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள், "இந்த விளம்பரமானது யாரையும் புண்படுத்தும் நோக்கமற்றது. மேலும் நகைச்சுவைக்காக இரண்டு எதிரி அணிகளை வைத்து செய்யப்பட்ட விளம்பரம் மட்டுமே இது. இது விளையாட்டின் நோக்கத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டது'" என்றும் வாதிட்டனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications