சிஎஸ்கே-வுக்கே ரூல்ஸ் போட்ட டெவால்ட் பிரெவிஸ்.. ஓகே சொன்ன தோனி, பிளெம்மிங்.. கோட்டை விட்ட டெல்லி
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ், சிஎஸ்கே அணிக்கு ஒரு நிபந்தனை விதித்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் இடையே சிஎஸ்கே அணியில் மாற்று வீரராகத்தான் அவர் இடம் பிடித்தார்.
ஆனால், அதற்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது. அப்போது அவரது நிபந்தனையை தங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

2025 ஐபிஎல் ஏலத்தில் டெவால்ட் பிரெவிஸ் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்றாலும், அவர் ஏபி டி வில்லியர்ஸைப் போல் ஆடக்கூடியவர் என்ற பெயர் இருந்தது. ஏலத்திற்குப் பிறகு நடந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அவர் அதிரடியாக விளையாடினார். அதனால் ஏதேனும் ஐபிஎல் அணி அவரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக அப்போதே பரவலாக பேசப்பட்டது.
இதனிடையே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே விலகுவதாக அறிவித்தார். இதை அடுத்து, ஹாரி ப்ரூக்கிற்குப் பதிலாக டெவால்ட் பிரெவிஸ்-ஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், அப்போது அவர் தனக்குப் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளித்தால்தான் விளையாட ஒப்புக்கொள்வேன் எனக் கூறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் பிளேயிங் லெவனில் நிச்சயமாக டெவால்ட் பிரெவிஸ் விளையாடுவார் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியாததால் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
அதன் பிறகு, ஐபிஎல் தொடரின் இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்று வீரர் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி நிர்வாகம் டெவால்ட் பிரெவிஸ்யை அணுகி இருக்கிறது. அப்போது அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடம் சொல்லிய அதே நிபந்தனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும் சொல்லி இருக்கிறார். தனக்குப் பிளேயிங் லெவனில் இடம் அளிக்க வேண்டும், போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டு இருக்கிறார்.
அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதனால்தான் அவரை ஒப்பந்தம் செய்த உடன் அடுத்த போட்டியில் இருந்து அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம் பெற்றார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு அவர் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்பட விட்டாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இந்த டெவால்ட் பிரெவிஸ்.


Click it and Unblock the Notifications