மும்பை: ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தற்போது தடுமாறி வருகின்றன. இந்தச் சூழலில், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தற்போதைய நிலைக்கு பிசிசிஐ எடுத்த ஒரு நடவடிக்கையே காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன. இதில் சிஎஸ்கே அணி கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை (2021 மற்றும் 2023) கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு முறைகூட கோப்பையை வெல்லவில்லை. அவர்கள் கடைசியாக 2020-இல் மட்டுமே சாம்பியன் பட்டம் பெற்றார்கள். 2021-இல் சிஎஸ்கே அணி சாம்பியன் ஆனபோது, மும்பை அணி ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

2022-இல் 10 அணிகள் அறிமுகமானபோது, சிஎஸ்கே ஒன்பதாவது இடத்தையும், மும்பை பத்தாவது இடத்தையும் பிடித்தன. 2023-இல் சிஎஸ்கே மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றபோது, மும்பை அணி நான்காவது இடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்றது. 2024-இல் சிஎஸ்கே ஐந்தாவது இடத்தையும், மும்பை பத்தாவது இடத்தையும் பிடித்தன. இதன் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில் மும்பை அணி ஒரே ஒரு முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது தெரிகிறது.
சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் மிகவும் பலமான அணிகளாக இருந்தபோதிலும், பிசிசிஐ செய்த ஒரு மாற்றமே இவ்வாறு அவை பாதிக்கப்படக் காரணம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகள் என்றால், சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் தான். இந்த இரு அணிகள் விளையாடும்போது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், இதனால் விளம்பர வருவாயும் உயரும்.
ஆனால், சிஎஸ்கே மற்றும் மும்பை மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தால், மற்ற அணிகளுக்கு அது பாதகமாக அமையும். இதை சரிசெய்ய, பிசிசிஐ மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலத்தை நடத்தி, அணிகளின் பலத்தை சமநிலைப்படுத்தியது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட அணிகள் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் தான்.
ஏனெனில், இந்த அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஒரு ஒருங்கிணைந்த அணியாக உருவாக்கியிருந்தன. ஆனால், பிசிசிஐ-யின் இந்த மாற்றத்தால், அவர்கள் வளர்த்த வீரர்கள் வேறு அணிகளுக்கு சென்றுவிட்டனர். மாற்று வீரர்களை கொண்டுவர வேண்டுமென்றால், புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்ததால், ஏலத்தில் தரமான வீரர்களைப் பெறுவது சிரமமாகிவிட்டது.
முன்பு வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சிறந்த வீரர்கள் கிடைத்தனர். ஆனால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரசல் போன்ற மூன்று வீரர்கள் மட்டுமே பிரகாசிக்கின்றனர். ஒரு காலத்தில் இலங்கை அணியில் ஜெயவர்தனே, சங்கக்காரா, மேத்யூஸ், மலிங்கா போன்ற திறமையான வீரர்கள் இருந்தனர்; ஆனால், தற்போது ஒரு சில வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
இப்படி, கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் குறைந்த நிலையில், கூடுதலாக இரண்டு அணிகள் சேர்ந்ததால், 10 அணிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடரில் சேர்க்காத நிலையில், ஒவ்வொரு அணியும் புதிய அணியை கட்டமைக்கும்போது, நினைத்த வீரர்களை வாங்க முடியவில்லை.
அதிலும், மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் கடந்த மெகா ஏலத்தில் சில தவறுகளை செய்தன. சிஎஸ்கே அணி, நன்றாக விளையாடுவார்கள் என்று நினைத்து வாங்கிய வீரர்கள் ஏமாற்றிவிட்டனர். மும்பை அணியில் ஜோஸஃப் போன்ற வீரர்கள் அணியைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து வாங்கினாலும், அவர் காயமடைந்து வெளியேறினார்.
இதுபோன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், இரு அணிகளும் தடுமாறி வருகின்றன. மும்பை அணி மிகப்பெரிய தவறாக, கேப்டன் ரோஹித் சர்மாவை மாற்றி, ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டுவந்தது; ஆனால், அது அவர்களுக்கு உதவவில்லை. சிஎஸ்கே அணியில் தோனி வயதாகிவருவதால், ஜடேஜாவை கேப்டனாக்கினர்; அது பலனளிக்கவில்லை. தற்போது ருதுராஜ் கேப்டனாக உள்ளார்; அவரும் சிறப்பாக செயல்படவில்லை.
ஆனால், மற்ற அணிகள் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்ற புதிய கேப்டன்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டு வருகின்றன.
இதனால், "மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளை வேண்டுமென்றே பலவீனப்படுத்த பிசிசிஐ இப்படி செய்ததா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்த இரு அணிகளும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
இருப்பினும், பிசிசிஐ-யின் செயலை ஆதரிக்கும் கிரிக்கெட் வல்லுநர்கள், "10 அணிகளுக்கும் ஒரே மாதிரியான ஏல நடைமுறைதான் இருந்தது. மும்பை மற்றும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த வீரர்கள் கைகொடுக்காததுதான் தவறு; அதற்கு பிசிசிஐ எதுவும் செய்ய முடியாது" என்று கூறுகின்றனர். "இரண்டு அணிகள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் ரசிகர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா? எனவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்துவது சரியான நடைமுறைதான்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தவறான உத்திகளைப் பயன்படுத்தியதால்தான் தோல்வியடைந்து வருகின்றன. "அணி போய்விட்டது என்று கவலைப்படாமல், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பார்த்து சரிசெய்தால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்" என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். நடப்பு சீசனில் இன்னும் சுமார் ஒன்பது போட்டிகள் உள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. அதற்கு ஏற்றார் போல், பயிற்சி முறையும், மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு, பஞ்சாப், லக்னோ, டெல்லி போன்ற அணிகள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அதிரடியாக ஆடுங்கள் என்று ஊக்குவிக்கிறது. ஆனால், சிஎஸ்கே இன்னும் 180 ரன்கள் எடுத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறது. இதனால், சிஎஸ்கே அணியும் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மும்பை அணிக்கு லக் மட்டும் தான் கைக் கொடுக்கவில்லை. மற்ற படி, அவர்கள் இதை எல்லாம் செய்து வருகின்றனர் என்பது தான் உண்மை.