IPL 2025: “நண்பனாகவே இருந்தாலும் நீ செய்தது தவறு”.. லக்னோ பவுலர் திக்வேஷுக்கு பிசிசிஐ அபராதம்
லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டம் இழந்து வெளியேறியபோது அவரை கிண்டல் செய்யும் வகையில் நடந்துகொண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் திக்வேஷ் சிங் ரத்திக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று நடந்த இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் எடுத்தது. அடுத்து பஞ்சாப் அணி அதிரடியாக சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். அவர் 9 பந்துகளை சந்தித்து எட்டு ரன்கள் மட்டும் எடுத்து திக்வேஷ் சிங் ரத்தி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பிரியன்ஷ் ஆர்யா மற்றும் திக்வேஷ் சிங் ரத்தி டெல்லி மாநில டி20 தொடரில் ஒரே அணியில் விளையாடுபவர்கள். தனது நண்பர் என்ற முறையில் திக்வேஷ் சிங் ரத்தி, பிரியன்ஷ் ஆர்யாவை கேலி செய்யும் வகையில் நடந்துகொண்டார். ஆர்யா ஆட்டமிழந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு அருகில் சென்று தனது கையில் ஒரு புத்தகம் இருப்பது போலவும், அதில் இவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என எழுதி வைத்து அதை முடித்து விட்டதாகவும் சைகை செய்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்ற ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு பேட்ஸ்மேன் தனது பந்துவீச்சில் அதிக பவுண்டரிகளை அடித்தால் அவரை ஆட்டம் இழக்கச் செய்துவிட்டு இதுபோல அவர் செய்து வந்தார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியதால் பின்னர் இந்த கொண்டாட்டத்தை அவர் நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்ற கொண்டாட்டத்தை தான் திக்வேஷ் சிங் ரதியும் செய்து இருக்கிறார். தனது நண்பர், தன்னுடன் டெல்லி டி20 லீக் தொடரில் ஒரே அணியில் ஆடியவர் அடிப்படையில் பிரியன்ஷ் ஆர்யாவை அவர் இவ்வாறு கேலி செய்திருக்கலாம். ஆனால் அம்பயர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை திக்வேஷ் செய்தபோது அவருக்கு அருகே சென்று இதுபோல செய்யக் கூடாது என அம்பயர்கள் அவரை எச்சரித்தனர். தற்போது பிசிசிஐ அவருக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும், ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக ஒரு கண்டிப்பு (Demerit - டீமெரிட்) புள்ளியும் வழங்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications