தினேஷ் கார்த்திக்குக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஓய்வு பெற்ற ஒரே மாதத்தில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக நியமனம்
பெங்களூர்: ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் அவர் ஆர்சிபி அணிக்காக பணியாற்ற இருக்கிறார். அவர் ஒரு 2024 ஐபிஎல் தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஓய்வு பெற்று ஒரு மாதமே ஆன நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை பேட்டிங் பயிற்சியாளராகவும், அணியின் ஆலோசகராகவும் நியமித்து இருக்கிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வந்தார். அவருக்கு இந்திய அணியில் நிலையாக இடம் கிடைக்காத போதும், தனது திறமைகளை வளர்த்துக் கொண்டே வந்தார். அவர் ஓய்வு பெறும் போது உலகின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஃபினிஷராக சிறப்பான ஆட்டத்தை ஆடி இருந்தார்.

ஆறாம் வரிசை வீரராக 15 போட்டிகளில் 326 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187 ஆக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்விலேயே ஒரு ஐபிஎல் தொடரின் முடிவில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தது 2024இல் தான். இருந்தபோதும் அந்த தொடருடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். அவருக்கு தற்போது 39 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஓய்வு பெறும் முன்பே கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். மிகக்குறுகிய காலத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வர்ணயணையாளர்களில் ஒருவராக அவர் புகழ் பெற்றார். அவரது கிரிக்கெட் அறிவு சிறப்பானதாக இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரின் அனுபவத்தின் காரணமாக அவரை ஆலோசகராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது. அது குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகை மீண்டும் அணிக்கு அழைக்கிறோம். ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருப்பார். கிரிக்கெட்டில் இருந்து இவரை பிரிக்கலாம். ஆனால், இவரிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அவர் எங்கள் அணியின் 12 வது படை வீரராக இருப்பார்" என கூறியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தினேஷ் கார்த்திக்கின் பங்கும் அதிகம்.


Click it and Unblock the Notifications