சென்னை: சமீபத்தில் ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவித்தார். அதில் தோனியின் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் ஆகவும், சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தவர் தோனி.
அவர் இல்லாமல் எப்படி ஒரு சிறந்த இந்திய அணியை அறிவிக்க முடியும் என ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் மீது கோபம் கொண்டனர். பலரும் தினேஷ் கார்த்திக் தனிப்பட்ட வெறுப்பால் தோனியின் பெயரை சிறந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் சேர்க்கவில்லை என விமர்சனம் செய்தனர். தோனியின் காலத்தில், தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம் பெற முயன்றார். ஆனால், தோனி அணியின் கேப்டனாக உயர்ந்துவிட்டதை அடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த தனிப்பட்ட மன வருத்தத்தாலும், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக இருக்கும் நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமான தோனியின் பெயரை சேர்க்காமல் விட்டு இருப்பார் என பலரும் ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தினேஷ் கார்த்திக் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
தான் தேர்வு செய்த அணியில் விக்கெட் கீப்பர் யாரையுமே சேர்க்கவில்லை எனவும், தான் விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்து விட்டதாகவும் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், "நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். உண்மையிலேயே அது தவறுதலாக நடந்த ஒரு விஷயம் தான். நான் பேசியது வீடியோவாக வெளிவந்த பின்னரே நான் அதை உணர்ந்தேன்."
"நான் அந்த 11 வீரர்களை தேர்வு செய்யும் போது பல விஷயங்களை யோசித்தேன். ஆனால், ஒரு விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்து விட்டேன். அந்த அணியில் ராகுல் டிராவிடை பகுதி நேர விக்கெட் கீப்பராக நான் சேர்த்ததாக சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் நான் அவரை விக்கெட் கீப்பராக சேர்க்கவில்லை. நான் விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்து விட்டேன் என்பதுதான் உண்மை. இது மிகப் பெரிய தவறு."
"என்னை பொறுத்தவரை தோனி எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் இடம் பெறுவார். அது இந்திய அணி என்று இல்லை. கிரிக்கெட் ஆடியதிலேயே மிகப்பெரிய ஒரு ஜாம்பவான் அவர். அந்த அணியை நான் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஏழாம் வரிசையில் தோனியின் பெயரை சேர்ப்பேன். அவர்தான் அந்த அணியின் கேப்டனாகவும் இருப்பார்." என தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்து இருக்கிறார்.