அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி 86 ரன்கள் சேர்த்தால் மாபெரும் ஐபிஎல் வரலாற்று சாதனை ஒன்றை செய்வார்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 700 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த சாதனையை ஏழு வீரர்கள் செய்துள்ளனர். அவர்களில் கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி இரண்டு சீசன்களில் 700 ரன்களுக்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளனர். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கிறிஸ் கெயில் 700 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை அடுத்தடுத்து எடுத்தார். விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 973 ரன்கள் எடுத்தார்; 2024 ஆம் ஆண்டு 741 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு விராட் கோலி இதுவரை 614 ரன்கள் எடுத்திருக்கிறார். இறுதிப்போட்டியில் அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். இந்த இறுதிப் போட்டியில் அவர் 86 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டும் 700 ரன்கள் எடுப்பார்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு சீசன்களில் எந்த ஒரு வீரரும் 700 ரன்களை எடுத்ததில்லை. இந்த நிலையில், விராட் கோலி இந்த ஆண்டு 700 ரன்களை எடுத்தால், முதன்முறையாக மூன்று வெவ்வேறு சீசன்களில் 700 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை செய்வார்.
ஆனால், இந்த ஆண்டு 86 ரன்களை மட்டும் வைத்து விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வெல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சாய் சுதர்சன் 759 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரை முந்த வேண்டும் என்றால் விராட் கோலிக்கு 157 ரன்கள் தேவை.