அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முடிவடைந்தது. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின் கடைசி பந்தில் நோ பால் வீசப்பட்டு இருந்தால் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என ரசிகர்கள் பலரும் மீம் வெளியிட்டு இருந்தனர்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 191 ரன்கள் நோக்கி ஆடிக் கொண்டிருந்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ரன் சேர்த்தாலும், ரன் ரேட்டுக்கு ஏற்ப அவர்களால் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் ஆறாம் வரிசையில் இறங்கிய ஷஷாங்க் சிங் தனியாளாக கடும் அழுத்தத்திற்கு இடையே பேட்டிங் செய்தார். அவர் கடைசி ஓவர் வரை நின்று 30 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களை அடித்திருந்தார்.
அதிலும் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், அவர் முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்க விட்டாலும், அடுத்த நான்கு பந்துகளில் மூன்று சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அப்போது கடைசி பந்தை நோபால் என அறிவித்திருந்து, மீண்டும் ஒரு பந்து வீசப்பட்டு அதிலும் ஷஷாங்க் சிங் சிக்சர் அடித்திருந்தால், போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும். இதை வைத்து மீம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
"ஒட்டுமொத்த படையையும் எதிர்த்து பேட்டிங் செய்ததாக" வெளியிடப்பட்டிருக்கும் மீமில், கடைசி பந்தில் நோபால் என அறிவிக்கப்பட்டிருந்தால் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் கடைசி ஓவர் முடியும் முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக உற்சாகத்தில் இருந்தனர்.
விராட் கோலி கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பஞ்சாப் ரன் எடுக்காத போதே தாங்கள் கோப்பையை வென்று விட்டதாக உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்தார். ஆனால் கடைசி பந்தில் நோபால் என அறிவிக்கப்பட்டிருந்தால் இது எல்லாமே ஹார்ட் அட்டாக்காக மாறி இருக்கும் என்பதைத்தான் இந்த மீம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தப் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி பேசுகையில், தான் இம்பேக்ட் வீரராக இருக்க விரும்பவில்லை எனவும், தான் போட்டியில் ஃபீல்டிங் செய்து இம்பாக்ட் உருவாக்க விரும்புவதாகவும் சுட்டிக்காட்டினார். விராட் கோலிக்கு இணையான வீரரான ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் வீரராக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மாவை சீண்டும் வகையில் பேசினாரா என மீம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வடிவேலு "எதே.. என்ன சொல்ற?" என்பது போல மீம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணி என்னும் நிலையில், அந்த அணிக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், "இயற்கை" படத்தில் வரும் கடைசி காட்சியை வைத்து ஐபிஎல் கோப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தேர்வு செய்வதாகக் காட்டியுள்ளனர்.
அதாவது, அந்தப் படத்தில் கதாநாயகி படத்தின் முடிவில் அருண் விஜய் மற்றும் ஷாம் ஆகிய இருவரில் அருண் விஜய்யைத் தேர்வு செய்வார். இதை வைத்து அருண் விஜய் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியாகவும், ஷாம் பஞ்சாப் கிங்ஸ் அணியாகவும் சித்தரிக்கப்பட்டு இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது.