RCB vs PBKS ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? ரிசர்வ் நாள் விதி என்ன?
அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பஞ்சாப் கிங்ஸ் 2025 ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் நாள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின்போது எந்த போட்டிக்கும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் இன்று, ஜூன் 3 அன்று, மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்றைய நாளில் 62% அளவுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. போட்டி நேரத்தின்போது மழை பெய்யாது எனக் கூறப்பட்டிருந்தாலும், போட்டி நேரத்திற்கு முன்பு அதிகப்படியான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, போட்டி துவங்குவதற்கு தாமதமாகலாம். மேலும், போட்டியின் நிலையையும் மழை பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி மழை பெய்து போட்டி இன்று நடைபெறாமல் போனால், ரிசர்வ் நாளான நாளை போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய நாளில் போட்டியை நடத்துவதற்கு இரண்டு மணி நேரம் கூடுதல் அவகாசம் உள்ளது. அதன்படி, நள்ளிரவு 12:56 வரை போட்டியை நடத்துவதற்கு அனுமதி உள்ளது. மேலும், அதிகபட்சம் இரு அணிகளும் 5 ஓவர் ஆடும் வகையில் போட்டியின் நேரம் குறைக்கப்படலாம். அப்படியும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் இந்த இறுதிப் போட்டி ரிசர்வ் நாளான நாளை முழுமையாக நடைபெறும்.
இதற்கு முன், 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி திட்டமிடப்பட்ட நாளன்று மழை பெய்ததால், மீண்டும் இரண்டாவது நாளான ரிசர்வ் நாளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போன்ற நிலை இன்று ஏற்படுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகிறது.
இறுதிப் போட்டியில் மோத உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. எனவே, இந்த இறுதிப் போட்டி அந்த இரண்டு அணிகளுக்கும் உணர்ச்சிபூர்வமான ஒரு போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணிகளுமே 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றதில்லை என்பதால், இரு அணிகளுக்கும் ரசிகர்களின் ஆதரவு சரிசமமாகவே உள்ளது. இந்த நிலையில், மழையால் இந்த போட்டி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications