அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது. குறிப்பாக, அந்த அணியின் தொடக்க வீரரும் மூத்த வீரருமான விராட் கோலி, அதிக பந்துகளை எதிர்கொண்டு மெதுவாக விளையாடியதுடன், ஒருநாள் போட்டி போல ஆடினார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரது ஆட்டம் ஏமாற்றமளித்தது.
பவர் பிளே ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் மந்தமாகவே ரன் சேர்த்தது. 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என பிட்ச் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில் முதல் ஆறு ஓவர்களில் அந்த அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்களில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி.

விராட் கோலி நிதானமாக ஆடியதால் ஒரு கட்டத்தில், பவர்பிளேவில் தொடர்ந்து 12 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. மேலும், முதல் பத்து ஓவர்களில் விராட் கோலி மட்டும் மொத்தம் 18 டாட் பால்களை எதிர்கொண்டார். அப்போது ரன் ரேட் சுமார் 8 ஆகவே இருந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்தன. இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால், இங்கு 200 ரன்களுக்கு மேல் எடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை பொதுவாகக் காணப்படும்.
இந்தப் போட்டி நடைபெற்ற ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என போட்டிக்கு முன்பு முன்னாள் வீரர்கள் கணித்திருந்தனர். குறிப்பாக, 200 ரன்கள் எடுத்தால்கூட அது போதுமான ஸ்கோராக இருக்காது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததாலும், விராட் கோலியின் மந்தமான ஆட்டத்தாலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளானது. விராட் கோலி அந்தப் போட்டியில் அணிக்கு அதிகபட்ச ரன்கள் எடுத்திருந்தாலும், மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடத் தவறியதால், அவரையும் முழுமையாக குற்றம் சாட்ட முடியாது.
15 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அஸ்மதுல்லா ஓமர்ஜாய் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதிப் போட்டியில் அவரது இந்த ஆட்டம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அதன் பிறகு, ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடினார். லிவிங்ஸ்டன், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் அதிரடியாக ரன் குவித்தனர். ஆனாலும், பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 190 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் தானே என சிலர் நினைக்கலாம். இந்த ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளில் இந்த 190 என்ற ஸ்கோர் தான் குறைவானது.