அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமான ஒரு விதி இருப்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது, இந்த இறுதிப் போட்டியின் போது மழை பெய்து போட்டி நடத்த முடியாமல் கைவிடப்பட்டால், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என கூறப்படுகிறது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, மழை பெய்து இறுதிப் போட்டி ரத்தானால், இரண்டு அணிகளும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். ஆனால், ஐபிஎல் விதியில் இது குறித்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, இறுதிப் போட்டி மழை அல்லது வேறு காரணங்களால் நடத்த முடியாமல் கைவிடப்பட்டால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டு அணிகளும் லீக் சுற்றில் எந்தெந்த இடங்களில் இருந்தன என்பதன் அடிப்படையில் முடிவு எட்டப்படும்.

அதன்படி, லீக் சுற்றில் இரண்டு அணிகளில் எது முன்னிலையில் இருந்ததோ, அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, 2025 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது இடத்தையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும்.
தற்போது அகமதாபாத்தில் நடைபெற உள்ள 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியின் இடையே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. இன்று போட்டி நேரத்திற்கு முன்பு அதிக அளவில் மழை பெய்யும் எனவும், போட்டி நேரத்தின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் வானிலை முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. எனினும், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியின் போதும் இதேபோல சொல்லப்பட்டது. ஆனால், போட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் மழையால் பாதிக்கப்பட்டது.
அதேபோல, இறுதிப் போட்டியின் போதும் மழை பெய்து பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, போட்டி அத்தனை எளிதில் கைவிடப்படாது. மேலும், இறுதிப் போட்டி நாளுக்கும் ரிசர்வ் நாளுக்கும் கூடுதலாக இரண்டு மணி நேரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இந்த கூடுதல் நேரத்தில் போட்டி நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஆன இந்த இறுதிப் போட்டி அத்தனை எளிதில் மழையால் ரத்து செய்யப்பட்டு விடாது. இறுதிப் போட்டியின் அன்று ஆறு மணி நேரமும், அதற்கு மறுநாள் ரிசர்வ் நாள் அன்று ஆறு மணி நேரமும் உள்ளது.
இந்த இரண்டு நாட்களில் குறைந்தபட்சம் இரண்டு அணிகளும் ஐந்து ஓவர் போட்டிகளில் ஆவது ஆடலாம். எனவே, இந்த போட்டி முடிவெடுக்கப்படாமல் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், மழை பெய்து போட்டி ரத்தானால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தான் கோப்பை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.