மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் எனத் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் சராசரியாக 8 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தங்களை ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிசிசிஐ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் செய்ததாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி தரம்சாலாவில் நடந்தது. அந்தப் போட்டி தான் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த தரம்சாலாவில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு செய்யும் குழுவினர் மற்றும் ஐபிஎல் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் ஐபிஎல் நிர்வாகம் பாதுகாப்பாக ரயிலில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதுபோன்ற இடர்பாடுகளை அடுத்து தான் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விரைவில் விவாதிக்க உள்ளதாகவும், ஐபிஎல் தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்தும் அதில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய அரசின் அறிவுரையையும் கேட்டு, ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது தற்காலிகமாக நிறுத்துவதா என்ற முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதன் முடிவில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில மாநிலங்களில் மட்டுமே பதற்றம் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.