சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில் தங்களின் அடிப்படை ஏல விலையை உயர்த்தி உள்ளனர். சிஎஸ்கே அணியில் விளையாடிய பின் அவர்களது மதிப்பு உயர்ந்து விட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகிய மூவரும் 2025 ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அடிப்படை விலையை உயர்த்தி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஐந்து வீரர்கள் மட்டுமே 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்பட்டனர்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிஷா பதிரானா, சிவம் துபே, தோனி ஆகிய ஐவரும் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். ஒரு அணி அதிகபட்சம் ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில் சிஎஸ்கே அணி 5 வீரர்களை தக்க வைத்தது. மற்ற வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில் ரச்சின் ரவீந்தரா கடந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றபோது தனது அடிப்படை விலையை 50 லட்சமாக நிர்ணயித்து இருந்தார். அவர் இந்த முறை தனது அடிப்படை விலையை 1.50 கோடியாக உயர்த்தி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் 1.80 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார் டெவான் கான்வே. 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
டெவான் கான்வே தற்போது சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தனது அடிப்படை ஏல விலையை 2 கோடியாக உயர்த்தி இருக்கிறார். அவர் 2022 ஐபிஎல் தொடரில் ஒரு கோடி என்ற அடிப்படை விலையை நிர்ணயித்து இருந்தார். அதே விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அப்போது வாங்கப்பட்டு இருந்தார்.
அடுத்து அஜின்க்யா ரஹானே மற்ற அணிகளால் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரது அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2023 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ரன் சேர்த்தார். ஆனால், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும், 2025 ஐபிஎல் ஏலத்தில் தனது அடிப்படை விலையை 1.50 கோடி ரூபாயாக அவர் உயர்த்தி இருக்கிறார்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவருக்கும் ஏலத்தில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியிடம் ஒரு "ரைட் டூ மேட்ச்" அட்டை உள்ளது. அதை பயன்படுத்தி இந்த மூவரில் ஒருவரை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வர முடியும்.