டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். டெல்லியில் நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டுபிளசிஸ் ஐந்து ரன்களிலும், அபிஷேக் போரெல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கத்தில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் விளாசினர். இதில் 14 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் அக்சர் பட்டேல் 25 ரன்ளும், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 21 ரன்ளும் எடுக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் களத்தில் நங்கூரம் போட்டு அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி அணி பவுலர்கள் தடுமாறினர். சாய் சுதர்சன் ஒருபுறம் அதிரடி காட்ட கில்லும் தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
33 பந்துகளில் அரை சதம் கடக்க சாய் சுதர்சன் 30 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசியது. நடப்பு சீசனில் இருவருமே 600 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 56 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுபடியும் கில் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார்.இதன் காரணமாக குஜராத் அணி 19 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதன் மூலம் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் குஜராத்தின் இந்த வெற்றி மேலும் இரண்டு அணிகளுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகளும் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். தற்போது நான்காவது அணிக்கான இடம் மட்டும் காலியாக இருக்கிறது. இதில் மும்பை, டெல்லி, மற்றும் லக்னோ என மூன்று அணிகள் போட்டி போடுகின்றன.