அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், கில் ஆகியோருக்கு ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய அபாரமான பந்து வீச்சு மூலம் வரவேற்பு அளித்தார்.

இந்த பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் கில் ரன்களில் ஆட்டம் இழக்க, பட்லர்,சாய் சுதர்சன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஜாஸ் பட்லர் ஐந்து பவுண்டரிகளை விரட்டி 25 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சாய் சுதர்சன் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்.
ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் சாய் சுதர்சனை குறி வைத்து விக்கெட்டுகள் வீழ்த்த போராடினாலும், சாய் சுதர்சன் தனது பேட்டிங் மூலம் தக்க பதிலடி கொடுத்தார். மற்றொரு தமிழக வீரரான ஷாருக்கான் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 20 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரூத்தர்போர்டு ஏழு ரன்களில் வெளியேற ரஷித் கான் நான்கு பந்துகளில் 12 ரன்களும் ராகுல் திவாத்தியா 12 பந்துகளில் 24 ரன்களும் சேர்த்தார்.
சாய் சுதர்சன் அதிகபட்சமாக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் அடித்திருக்கும் மூன்றாவது அரை சதம் இதுவாகும். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் பந்துவீச்சில் துசார் தேஷ் பாண்டே மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும் இவர்கள் இருவரும் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். அபாரமாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.