அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கின்றோம். ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு இங்கு களிமண் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது செம்மண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என நினைக்கின்றேன். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி வந்திருக்கின்றோம். கடந்த ஆண்டு இங்கு விளையாடும் போது எங்களால் வெற்றி அருகே வந்து தோல்வியை தழுவி விட்டோம்.
ஆனால் இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கின்றேன். எங்கள் வீரர்கள் அனைவரும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கின்றோம். இன்றைய ஆட்டத்தில் நான் அணிக்கு திரும்பி இருக்கின்றேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்கின்றோம். போட்டியை மகிழ்ந்து விளையாடுகின்றோம் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், இங்கு முதலில் பேட்டிங் செய்யும்போது அதிக முறை விளையாடி இருக்கின்றோம்.எனவே எங்களுக்கு எந்த ஒரு மாறுதலும் கிடையாது. ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இதுவே சேஸ் செய்வதாக இருந்தால் இலக்கை எப்படி தொடுவது என்பது குறித்து திட்டமிட வேண்டும்.
கடந்த போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும், பல நல்ல விஷயங்கள் இருந்தது. நடு ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக நாங்கள் விளையாடிவிட்டோம். இருப்பினும் 14 ஓவர்களில் 200 ரன்கள் மேல் அடித்தோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் என்று செய்யவில்லை. வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் எங்களுடைய பேட்டிங் வரிசையை அமைத்திருக்கின்றோம் என்று கில் கூறினார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புதூர் என்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.