அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனுக்கு சாதகமான விதிகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
மேலும் இம்பேக்ட் வீரர் விதி மூலம் கூடுதல் பேட்ஸ்மேன் பிளேயிங் லெவனில் இருப்பதால் ஒவ்வொரு அணியும் அதிக ரன்கள் அடிப்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்களில் டாப் 10-ல் ஒன்பது ஸ்கோர் கடந்த ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

250 ரன்கள் என்று இலக்கை 9 முறை அணிகள் கடந்த சீசனில் தகர்த்தனர். மேலும் மூன்று முறை 240 ரன்களையும் , பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்கள் என்ற இலக்கையும் 8 பந்துகள் எஞ்சிய நிலையிலும் எட்டியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், "தற்போது போட்டி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது."
"இதன் மூலம் நாங்கள் ஒரே போட்டியில் 300 ரன்கள் கூட அடிக்க முடியும். நாங்களே பல முறை அந்தக் கட்டத்தை நோக்கி சென்றோம். இம்பேக்ட் பிளேயர் விதி மூலம் எங்களால் கூடுதல் வீரர்களை சேர்க்க முடிகிறது. இது ஐபிஎல் தொடரை மேலும் பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறந்த அம்சமே ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வீரர் ஸ்டார் வீரராக உருவெடுப்பார்."
"கவனிக்கப்படாத திறமை வாய்ந்த வீரர்கள் கூட இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு மேலே வருவார்கள். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் நடுவே அதிகம் பயணம் செய்யும் வகையில் இருக்கும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதே உத்வேகத்துடன் தொடர்ந்து மூன்று நான்கு போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.இது போன்ற சூழலில் காயம் ஏற்படும் அதை சமாளிக்க வேண்டும்."
"வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதற்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இவ்வளவு தடைகள் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை ஐபிஎல் தொடர் தான் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் வழங்குகிறது என்று கில் தெரிவித்துள்ளார்."கடந்த சீசனில் குஜராத் கேப்டனாக அறிமுகமாகிய கில் 426 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் லைட் 147 ஆகும். புள்ளி பட்டியலில் 14 போட்டியில் விளையாடி குஜராத் ஆறு வெற்றிகளை பெற்று குஜராத் எட்டாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.