மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பகுதியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்படலாம் எனவும் சூர்யகுமார் யாதவ் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் .
முன்னதாக 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார், அவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என்ற சூழ்நிலை இந்திய அணியில் நிலவியது.

அப்போது ரோஹித் சர்மா 2022 டி20 உலக கோப்பை முதல் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு இனி டி20 அணியில் இடம் அளிக்கப்படாது என்ற ஒரு நிலை இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டன் என சொல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு அணிமாற்றம் செய்து கொண்டது.
மேலும், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அதனால், அந்த அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. ரோஹித் சர்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய சில வீரர்கள் பாண்டியா தலைமையை மனமார ஏற்க மறுத்தனர். அந்த அணியில் விரிசல் எழுந்தது.
2024 ஐபிஎல் தொடரில் அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
ரோஹித் சர்மா அத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்து ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டன் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அணிக்கு மேலும் ஒரு அடியாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சூர்யகுமாரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியாவின் கீழ் இந்திய டி20 அணி கேப்டன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவின் கீழ் ஆடியதால் தான் அந்த அணியில் விரிசல் எழுந்தது. அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் அது போன்ற நிலையை தவிர்க்க சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமாரின் கேப்டன்சி அபாரமாக இருந்தது. தோல்வி அடைவது போல சென்ற மூன்றாவது போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்று அவர் வெற்றியாக மாற்றினார். அவரது கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.