முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே சமயம், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், 60 பந்துகள் மீதமிருந்த நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் படுதோல்விக்குப் பிறகும் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் இறுதிப் போட்டியில் விளையாட முடியுமா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

2025 ஐபிஎல் பிளேஆஃப் விதிப்படி, முதல் தகுதிப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் மோதும். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த அணி, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட முடியும். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி ஜூன் 1 அன்று நடைபெற உள்ள இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது. இன்று (மே 30) நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடும்.
எனவே, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் மோதும். அந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
இறுதிப் போட்டியில் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சந்திக்கும் வாய்ப்பையும் பஞ்சாப் கிங்ஸ் பெற முடியும். முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அதற்குப் பழிதீர்க்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.