அகமதாபாத்: ஐபிஎல் 2019 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அகமதாபாத்தில் இன்று வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் ஒவ்வொரு வீரர்களும் செம கடுப்பில் இருந்தனர். இந்த தருணத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களும் சேர்த்தது.

கடும் வெயிலில் பவுலர்கள் பந்து வீசியதால் சிரமத்திற்கு ஆளாகினர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷாந்த் சர்மா இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்று ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இசாந்த் சர்மாவுக்கு 36 வயது ஆகிறது.
இந்த நிலையில் டெல்லி அணியின் ஆஷுதோஷ் சர்மா இன்றைய ஆட்டத்தில் 19 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். போட்டியின் போது ஆஷுதோஷ் சர்மா மீது பந்து பட்டதாக தெரிகிறது. இதனால் ஆஷுதோஷ் சர்மா கடுப்பாகி திட்டி இருக்கிறார்.
இதனால் இஷாந்த் சர்மாவுக்கும் கோபம் வந்தது. சீனியர் வீரரான என்னை மரியாதை இல்லாமல் திட்டுவதா என்று கூறி அவர் ஆஷுதோஷ் சர்மாவிடம் கோபமாக பேசினார். மேலும் கை விரலைக் காட்டி ஜாக்கிரதை தொலைத்து விடுவேன் என்பது போல் இஷாந்த் சர்மா பேசினார். இஷாந்த் சர்மாவின் இந்த பேச்சை அஷுதோஷ் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதை அடுத்து நடுவர்கள் இசாந்த் சர்மாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த நிகழ்வில் பலரும் இஷாந்த் சர்மாவின் செயலை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். சீனியர் வீரரான இஷாந்த் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் வெயிலின் தாக்கத்தால் இஷாந்த் சர்மா தன்னுடைய நிதானத்தை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்திருக்கிறது.