ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பிசிசிஐ தண்டனை கொடுத்து இருக்கிறது.
இது குறித்து மேட்ச் ரெப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், இஷாந்த் ஷர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஐபிஎல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும், அதற்காக அவருக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிப்பதாகவும், மேலும் ஒரு டிமெரிட் புள்ளி வழங்குவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

எதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, போட்டியில் இஷாந்த் ஷர்மா என்ன தவறு செய்தார்? என்ற விவரம் வெளியாகவில்லை. ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, பிரிவு 2.2, போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது சாதனங்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான விதிகளின் கீழ் அவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த போட்டியில் இஷாந்த் ஷர்மா மிக மோசமாக பந்து வீசினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய நிலையில், இஷாந்த் ஷர்மா 53 ரன்களை வாரி இறைத்து இருந்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை.
இஷாந்த் ஷர்மா மோசமாக பந்து வீசியிருந்தாலும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதால் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மற்றொரு முன்னணி பந்துவீச்சாளரான ரஷீத் கான் நான்கு ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார், விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இஷாந்த் ஷர்மாவுடன் ஒப்பிடும் போது ரஷித் கான் அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவை தவிர்த்து மற்ற நான்கு குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களும் 16 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். ஆனால், இஷாந்த் ஷர்மா நான்கு ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. அந்த அளவுக்கு மிக மோசமாக இருந்தது அவரது செயல்பாடு.
பின்னர் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 152 ரன்கள் எடுத்தது. அந்த அணி நிர்ணயித்த 153 ரன்கள் என்ற இலக்கை 16.4 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செய்தி சுருக்கம்:
ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக குஜராத் டைட்டன்ஸ் வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
அவர் விதிமீறியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த போட்டியில் இஷாந்த் ஷர்மா மோசமாக பந்து வீசியிருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.