லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அந்த அணியில் இணைய இருக்கிறார். இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களில் "வந்துட்டான்" என பல்வேறு மொழிகளில் பதிவை வெளியிட்டு ஜோஷ் ஹேசில்வுட் வருகையை கொண்டாடி உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டபோது, சில வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் பங்கேற்க மறுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், அவர் மீண்டும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி முதல் விளையாட வந்துள்ளார்.
தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப்க்கு முன்னேறி இருக்கும் நிலையில், அதிலும் அவர் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்திருக்கும். ஏனெனில், ஜோஷ் ஹேசில்வுட் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை முன்னின்று வழிநடத்தினார். அவர் இல்லாத நிலையில், கடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்திருந்தது.
தற்போது தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் தான் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கலாம் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது. எனவே, ஜோஷ் ஹேசில்வுட்டின் வருகை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயத்தில் சிக்கி இருக்கிறார். அவரால் ஒரு இம்பாக்ட் வீரராக மட்டுமே விளையாட முடிந்திருந்தது. அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் காயத்தில் சிக்கி இருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.