ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியின் இடையே டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் விப்ரஜ் நிகாம் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ரன் அவுட் செய்யுமாறு மேலே இருந்து ஆலோசனையை அளித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பின்னர் எல்லாமே வீணாகிப் போனது.
2025 ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் என்ற நிலையில் இருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதற்கேற்ப இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசி அபாரமாகச் செயல்பட்டிருந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் பந்திலேயே கருண் நாயர் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் என வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அக்ஸர் படேல், கே.எல். ராகுல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அப்போது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஓரளவு ரன் சேர்த்து வந்தார். அவருடன் விப்ரஜ் நிகாம் ஜோடி சேர்ந்து ஆடி வந்தார்.
இந்த நிலையில், 13வது ஓவரின் முதல் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இரண்டு ரன் ஓடுமாறு விப்ரஜ் நிகாமிடம் சொல்லிவிட்டு, வேகமாக இரண்டு ரன் ஓடினார். ஆனால் விப்ரஜ் நிகாம் ஒரு ரன் மட்டுமே முழுமையாக ஓடியிருந்தார். இரண்டாவது ரன்னை சற்று தாமதமாக ஓட வந்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் விப்ரஜ் நிகாம் ஆகிய இருவரும் ஒரே முனைக்கு (பேட்டிங் முனைக்கு) சென்றனர். இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக விப்ரஜ் நிகாமை ரன் அவுட் செய்தது.
இந்த ரன் அவுட் நிகழ்வின் போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த காவ்யா மாறன் உற்சாகத்தில் துள்ளினார். விப்ரஜ் நிகாம் மறுமுனைக்கு ஓடியதை பார்த்த அவர், "ரன் அவுட் செய்யுங்கள், ரன் அவுட் செய்யுங்கள்" என மேலே இருந்து சைகை செய்து துள்ளிக் குதித்தார். இந்தக் காட்சி தான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பின்னர் இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அசுதோஷ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் மழை பெய்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. எனவே இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியாமல், கடைசி வாய்ப்பையும் இழந்தது.