ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே அதிரடியின் உச்சத்தை தொட்டு இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் 286 ரன்களை அடித்து இருக்கிறது. இதை அடுத்து "அவெஞ்சர்ஸ்" அணியை உருவாக்கியதாக காவ்யா மாறனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் அணி கடந்த ஆண்டு அதிரடி ஆட்டம் அடி இருந்தாலும் இந்த முறை முதல் போட்டியிலேயே 300 ரன்களை நெருங்கியதற்கு முக்கிய காரணமே அந்த அணியை திட்டமிட்டுக் கட்டமைத்தது தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனை வாங்கியது மிக முக்கியமான முடிவு. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியில் இருந்த ஒரே ஒரு பேட்டிங் பலவீனத்தையும் நிறைவு செய்தார். காவ்யா மாறனின் இந்த நகர்வுக்கு பின் ஒரு வலியும் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டி வரையும் முன்னேறியது.
ஆனால், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடியால் படுதோல்வி அடைந்தது. அப்போது காவ்யா மாறன் மிகவும் உடைந்து போனார். அந்த வேதனைகளில் இருந்து மீண்டு அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் சில சிறப்பான முடிவுகளை எடுத்தார்.
தோல்வி அடைந்ததால் தனது அணியை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என நினைக்காத அவர் முக்கிய பேட்ஸ்மேன்களை அப்படியே தக்க வைத்ததோடு அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸையும் தக்க வைத்தார். பேட்டிங் வரிசையில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹெய்ன்ரிச் கிளாஸன் ஆகியோரை தக்க வைத்தார். அவர்கள் நால்வருமே அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர்கள்.
அடுத்து ஏலத்தில் இஷான் கிஷனை வாங்கினார். அப்போது பலரும் இஷான் கிஷன் அதிரடியாக ஆடுவாரா? அப்படியே ஆடினாலும் சன்ரைசர்ஸ் அணியில் போட்டிகளில் அவருக்கு இடம் அளிக்கப்படுமா? எப்படி ஒரு அணியில் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டக்காரர்களை மட்டுமே விளையாட வைக்கும்? என கேள்வி எழுப்பினர்.
ஆனால், அதை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார் காவ்யா மாறன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசையில் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்களும், அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாம் வரிசையில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நிதிஷ்குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்களும், ஹெய்ன்ரிச் கிளாஸன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது. இந்த செயல்பாட்டால் பலரும் காவ்யா மாறனை பாராட்டி வருகின்றனர். மற்ற அணிகளை மிரள வைக்கும் பேட்டிங் வரிசையை கொண்ட அவெஞ்சர்ஸ் அணியை உருவாக்கி இருக்கிறார் என அவரை கொண்டாடி வருகின்றனர்.
செய்தி சுருக்கம்: