கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் கேகேஆர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. 11 மணி வரை மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுவர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இதற்கு முன் இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கேகேஆர் அணியை 95 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து பஞ்சாப் அணி மரண மாஸ் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்களையும், பிரியன்ஷ் 35 பந்துகளில் 69 ரன்களையும் விளாசி தள்ளினர். கடைசி நேரத்தில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 25 ரன்களை விளாசினார். இதன்பின் 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கேகேஆர் அணி களமிறங்கியது.
முதல் ஓவரில் 7 ரன்களை கேகேஆர் அணி சேர்த்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை நின்று ஆட்டம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, பலமாக காற்று வீசத் தொடங்கியது. இதனால் மைதான ஊழியர்கள் உடனடியாக ஒட்டுமொத்த மைதானத்தையும் தார் பாய் விரித்து பாதுகாத்தனர்.
10.30 மணி வரை மழை பெய்தாலும், ஓவர்கள் குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 10.30 மணிக்கு மேலாகவும் மழை அதிகமாக பெய்ய தொடங்கியது. ஒரு கட்டத்தில் மழை நிற்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. இதனால் கேகேஆர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் மும்பை அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கேகேஆர் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.