IPL 2025: “என்னையா வேணாம்னு சொன்னீங்க?” சிஎஸ்கே-வுக்கு பதிலடி கொடுத்த ரஹானே.. 25 பந்தில் 50
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்கிய அஜிங்க்யா ரஹானே அதிரடி ஆட்டம் ஆடி வெளுத்து வாங்கினார். 25 பந்தில் அரைசதம் அடித்தார்.
2024 ஐபிஎல் தொடரில் ரஹானே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தாலும், அந்த அணியில் அவர் 2023 ஐபிஎல் தொடரில் ஆடியது போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 2024 ஆம் ஆண்டில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கவில்லை.

2025 ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் அஜிங்க்யா ரஹானேவை எந்த அணியும் வாங்கவில்லை. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அப்போது அது தவறான முடிவாக பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் ஒரு படி மேலே போய் அஜிங்க்யா ரஹானேவை தங்கள் அணியின் கேப்டனாகவும் நியமித்தது.
இதற்கிடையே அஜிங்க்யா ரஹானே மும்பை அணிக்காக சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை ஆடியிருந்தார். அதன் பின்னர் அவர் மீதான நம்பிக்கை அதிகரித்தது. எனினும், ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்டிங் வரிசையில் சரியாக இருப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை முதல் போட்டியிலேயே அடித்து உடைத்து இருக்கிறார்.
அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். அவர் அரை சதம் அடித்தபோது ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தவற விட்டு விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
மேலும், ரஹானேவின் அனுபவத்தையும், திறமையையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டதாக அந்த அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications