கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் ஆறு வீரர்களுக்கு இடையே உள்ள போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
முதலில் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கும் இடையே ஆன போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சை விராட் கோலி சமாளித்து ரன் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்து, புவனேஸ்வர் குமார் பெங்களூரு அணியில் புதிதாக இணைந்துள்ள நிலையில், அவர் தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் அச்சுறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமும், கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறமும் உள்ளது.
அடுத்து கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்டுக்கும், கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவருக்கு இடையே யார் அதிக சிக்ஸர்களை அடிப்பார்கள் என்ற போட்டி உள்ளது.
இவர்களைத் தவிர்த்து, அஜிங்க்யா ரஹானே மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறியிருக்கிறார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். அவர்களுக்கு இணையாக ரஹானே விளையாடுவாரா அல்லது அவர் விராட் கோலி போல ஒரு புறம் நங்கூரமிட்டு ஆட மற்ற பேட்ஸ்மேன்கள் அவரைச் சுற்றி அதிரடியாக விளையாடுவார்களா? என்ற கேள்வி உள்ளது.
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அவர் அதிரடியாக விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி நடைக்கு உதவுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருக்கும் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடுவாரா? அல்லது இங்கிலாந்து அணியின் சமீபத்திய மோசமான ஃபார்மை போல அவரும் சொதப்புவாரா? என்ற கேள்வி உள்ளது. முதல் போட்டியில் அவரது ஆட்டத்தை வைத்து அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.