KKR vs RCB போட்டி மழையால் தடைபட்டால் என்ன நடக்கும்? ரிசர்வ் நாள் உள்ளதா? எத்தனை ஓவர்கள்?
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி மழையால் தடைபடும் நிலை உள்ளது. கொல்கத்தாவில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
போட்டி நாளான இன்று (மார்ச் 22) காலை முதல் மழை பெய்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பும் மீண்டும் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? போட்டி முற்றிலுமாக கைவிடப்படுமா அல்லது ரிசர்வ் நாள் உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே ரிசர்வ் நாள் உள்ளது. லீக் சுற்றில் நடக்கும் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் எதுவும் இல்லை. மழையால் பாதிக்கப்பட்டால் முதல் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஓவர்கள் குறைக்கப்படும்.
குறைந்தபட்சம் இரண்டு அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாட வேண்டும். அப்படி ஐந்து ஓவர் போட்டியாக நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தாலோ அல்லது போட்டி கைவிடப்பட்டாலோ முடிவே இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
கொல்கத்தாவில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி முற்றிலுமாக கைவிடப்படும் அளவுக்கு நிலைமை இல்லை என்றே ஈடன் கார்டன் மைதான நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அந்த மைதானத்தின் அவுட் பீல்டு பகுதி உட்பட அனைத்து பகுதிகளும் உறைகளால் மூடப்பட்டு உள்ளது.
எனவே, போட்டி நேரத்தின் இடையே ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மழை பெய்யாமல் நின்றால் கூட எளிதாக 5 ஓவர் போட்டியை நடத்தி முடித்து விட முடியும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஐபிஎல் துவக்க விழா இந்த மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
செய்தி சுருக்கம்:
- ஐபிஎல் 2025 தொடக்கப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
- கொல்கத்தாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது.
- லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் கிடையாது.
- மழை காரணமாக போட்டி தாமதமானால் ஓவர்கள் குறைக்கப்படும்.
- குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீதம் இரு அணிகளும் விளையாட வேண்டும்.
- போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications