சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ்-ஐ பார்த்து வருண் சக்கரவர்த்தி செய்த செயல்.. பிசிசிஐ அபராதம் விதிப்பு
கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், வருண் சக்கரவர்த்தி செய்த தவறான செயலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேற்று அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரெவிஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
அவர் அந்த விக்கெட்டுக்கு முன்னதாக 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்திருந்தார் பிரெவிஸ். 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 208 என்பதாக இருந்தது. அவரது ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி நோக்கி வேகமாக முன்னேறியது.

இந்த நிலையில், வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை முக்கியமான கட்டத்தில் வீழ்த்தினார். 13வது ஓவரின் முதல் பந்தில் டெவால்ட் பிரெவிஸ் ஆட்டமிழந்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 127 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. வருண் சக்கரவர்த்தி, தங்கள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியவரின் விக்கெட்டை வீழ்த்தியதால், விதியை மீறி அவரை வழி அனுப்பும் வகையில் சைகை செய்தார். "'வெளியே போ'" என தனது விரல்களால் சைகை செய்தார்.
ஐபிஎல் விதிப்படி, ஒரு வீரரை வழி அனுப்பும் வகையில் ஒரு பந்துவீச்சாளரோ அல்லது பந்துவீசும் அணியைச் சேர்ந்த ஒருவரோ சைகை செய்தால், அவருக்கு விதிப்படி தண்டனை அளிக்கப்படும். அதன்படி வருண் சக்கரவர்த்திக்கு போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வருண் செய்யும் முதல் குற்றம் என்பதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது. மீண்டும் இதே தவறை செய்தால், வருண் சக்கரவர்த்திக்கு போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்படும். மேலும் இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு அணிகளிலும் சேர்த்து அவரே மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. டெவால்ட் பிரெவிஸ் 52 ரன்களும், ஷிவம் துபே 40 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.


Click it and Unblock the Notifications