மும்பை: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாகவே லக்னோ அணி கேஎல் ராகுலை தக்க வைத்தாலும், அவருக்கு கேப்டன்சி பொறுப்பு அளிக்க வேண்டும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா முடிவு எடுத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கான விதிகளை பிசிசிஐ விரைவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இம்முறை 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளின்றி அணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 6 வீரர்களையாவது மீண்டும் தக்க வைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று லக்னோ அணியின் புதிய ஆலோசகராக ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2018 முதல் 2022 வரை மும்பை அணியின் இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜாகீர் கான்.
இவருடனான ஒப்பந்தத்தை 2022ஆம் ஆண்டுடன் மும்பை அணி நிர்வாகம் முடித்து கொண்டுள்ளது. இதன்பின் ஓய்வில் இருந்து வந்த ஜாகீர் கானை லக்னோ அணி நிர்வாகம் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. அப்போது இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட சூழலில், உடனடியாக ஜாகீர் கானை ஆலோசகராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த சீசனில் ஆலோசகர் பதவி நிரப்பப்படாமல் இருந்த சூழலில், தற்போது ஜாம்பவான் வீரரான ஜாகீர் கான் மூலமாக நிரப்பப்பட்டுள்ளது. இது லக்னோ அணிக்கு நிச்சயம் பயனளிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை போன்ற பெரிய அணியை ஜாகீர் கான் நிர்வகித்த அனுபவம் இருக்கிறது. அதேபோல் இந்திய மைதானங்கள் குறித்து ஜாகீர் கானுக்கு யாரும் சொல்லி கொடுக்க தேவையில்லை.
அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறியுள்ளார். இதனால் எளிதாக அவரின் இடத்தையும் ஜாகீர் கானை கொண்டு நிரப்ப முடியும். இதனிடையே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ரீடென்ஷன் பாலிசி இன்னும் வரவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஜெய்ண்ட்ஸ் குடும்பத்தின் முக்கியமான நபர் கேஎல் ராகுல் தான். ரீடென்ஷசி பாலிசி வந்த பின்னர் தான் கேப்டன் யார் என்று கூற முடியும் என்று தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சஞ்சீவ் கொயங்கா இருவரும் மும்பையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது லக்னோ அணியின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கேப்டன் யாரென்று மெகா ஏலத்திற்கு பின் முடிவு எடுக்கப்படும் என்று சஞ்சீவ் கொயங்கா பேசியிருப்பதன் மூலமாக, லக்னோ அணி புதிய கேப்டனுக்கான தேடலில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கேஎல் ராகுல் 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த சீசனின் முதல் பாதியில் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டும் 2ஆம் பாதியில் கோட்டைவிட்டது. இதற்கு கேஎல் ராகுலின் கேப்டன்சியும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் லக்னோ அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.