சண்டிகர்: ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபெண்ட் செய்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெறும் 111 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், பின்னர் களமிறங்கிய கேகேஆர் அணி வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அனிருத் ஸ்ரீகாந்த் நடத்திய யூட்யூப் விவாதத்தில், கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள் என்று அனிருத் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ரீகாந்த், "ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் பெரிதாக எதுவும் செய்யவில்லை" என்று பதில் அளித்தார்.

அதற்கு டென்ஷனான அனிருத் ஸ்ரீகாந்த், இத்தனை ஆண்டுகளாக மும்பை மற்றும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் போது ரோஹித் சர்மாவும், தோனியும் 500 ரன்களுக்கு மேல் விளாசி இருந்தார்களா என்ன.. தோனியும், ரோஹித் சர்மாவும் சிறப்பாக அணியை வழி நடத்தினார்கள்.. அதனை ஒப்புக் கொள்கிறேன்.. அதேபோல் ஸ்ரேயாஸ் கேகேஆர் அணியை வழிநடத்தி இருக்கிறார்.. இதனை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று பதில் அளித்தார்.
இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய ட்ரெண்டாகியது. இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அப்போது போட்டியை பார்த்த பலரும் கேகேஆர் அணியின் வெற்றி உறுதியான ஒன்று என்று எண்ணினார்கள். ஆனால் யாரும் எதிர்பாரா வகையில், கேகேஆர் அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி செய்து சாதனை படைத்துள்ளது. அவரின் பவுலிங் மாற்றங்கள், சாஹல் பவுலிங் செய்த போது உடனடியாக லெக் ஸ்லிப் நிறுத்தியது, ரஸ்ஸல் பேட்டிங் ஆடும் போது அவருக்காக பவுன்சர் திட்டத்தை உருவாக்கியது, டெய்லண்டர்களை வீழ்த்த உடனடியாக வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து அசத்தினார்.
இதனால் கடந்த சீசனில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி முக்கிய காரணம் என்று ரசிகர்கள் அறிய தொடங்கியுள்ளனர். கம்பீர் மட்டுமே கேகேஆர் அணியின் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அடைந்துள்ள வெற்றிகளால் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.