கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்று லக்னோ கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டி சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற இருந்ததால் இந்த போட்டி தற்போது செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் டாஸ் வென்ற கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. தற்போது பெரிய அளவு வெப்பம் இல்லை.

அதனால் ஆடுகளமும் பெரிய அளவு மாறாது என நினைக்கிறேன். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி அளவு சிறியதாக இருக்கிறது. இதனால் தான் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறோம். அனைவரும் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
கடந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும் மீண்டும் புதியதாக தொடங்குகிறோம். கடைசியாக நடைபெற்ற போட்டியில் நடந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றோம். ஒரு போட்டியை ஒரு நேரத்தில் எடுத்துக்கொண்டு விளையாடுகின்றோம். எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
ஏனென்றால் குயின் டி காக், சுனில் நரைன் இருவருமே மேட்ச் வின்னர்கள். இன்றைய ஆட்டத்தில் ஸ்பென்சர் ஜான்சன் மோயின் அலிக்கு பதிலாக விளையாடுகிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பண்ட், லக்னோ அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் லக்னோ அணி உரிமையாளர் எப்போதுமே தன் அணி கேப்டனுடன் நல்ல உறவில் இருப்பதில்லை. அனைவரும் முன்பு கையை ஆட்டி ஆட்டி பேசுவதும் திட்டுவதும் என அவருடைய நடவடிக்கை மரியாதை குறைவாக இருக்கிறது. ஏற்கனவே ராகுலுடன் இதே பிரச்சனையை அவர் சந்தித்த நிலையில் தற்போது பண்ட் இடமும் அதே போல் நடந்து கொள்கிறார். இதனால் தான் பண்ட் இவ்வாறு சொல்லிவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எனினும் இந்த போட்டி குறித்து பேசிய பண்ட், எங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். ஒரு கேப்டனாக என் அணி வென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் அதே பிளேயிங் லெவன் வைத்து தான் விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.