லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான். அவரை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஏலத்தில் வாங்கியிருந்தார்.
அப்போது தனது அணியின் நிலை முற்றிலும் மாறிவிட்டதாக அவர் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாகச் சென்று, அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மிகவும் போராட வேண்டிய நிலையில் உள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை விமர்சித்து வரும் அதே நேரத்தில், தோனி, கே.எல். ராகுல் போன்ற சிறந்த வீரர்களை சஞ்சீவ் கோயங்கா அவமதித்து நடந்து கொண்டதையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

சஞ்சீவ் கோயங்கா 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (Rising Pune Supergiant) என்ற ஒரு அணியை வைத்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு மட்டுமே ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற அந்த அணியின் கேப்டனாக தோனியை அவர் நியமித்திருந்தார்.
ஆனால், முதல் சீசனில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததை அடுத்து, தோனி மீது அவர் அதிருப்தி அடைந்தார். 2017 ஆம் ஆண்டு பாதி சீசனில் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் பின்னர் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியை சஞ்சீவ் கோயங்கா அவமானப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் கோபம் கொண்டனர்.
பின்னர் அதே சஞ்சீவ் கோயங்கா 2022 ஆம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற ஐபிஎல் அணியின் உரிமையாளராக மாறினார். அந்த அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் முதல் மூன்று ஆண்டுகள் செயல்பட்டார். அந்த அணி முதல் இரண்டு ஆண்டுகளில் பிளே ஆஃப் வரை முன்னேறினாலும் கோப்பை வெல்லவில்லை.
அடுத்து 2024 ஆம் ஆண்டு அந்த அணி மோசமாக சொதப்பி வந்தது. ஒரு போட்டியில் கேப்டன் கே.எல். ராகுலை மைதானத்திலேயே மிக மோசமாக விமர்சித்திருந்தார் சஞ்சீவ் கோயங்கா. இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் கே.எல். ராகுலை அவர் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்திருந்தனர். அதன் பிறகு கே.எல். ராகுல் அந்த அணியிலிருந்து விலகினார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கே.எல். ராகுலை வாங்கியது. மறுபுறம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து விலகி இருந்த ரிஷப் பண்ட்டை சஞ்சீவ் கோயங்கா 27 கோடி ரூபாய் அளித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக வாங்கினார். ரிஷப் பண்ட்டை கேப்டனாகவும் அறிவித்தார்.
அதிரடி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என அனைத்து வகையிலும் ரிஷப் பண்ட் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்துதான் 27 கோடி செலவிட்டிருந்தார் சஞ்சீவ் கோயங்கா. ஆனால் இந்த மூன்று செயல்பாடுகளிலும் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு காரணம் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அளிக்கும் அழுத்தம் தான் என சில ரசிகர்கள் கூறுகின்றனர்.
என்னதான் இருந்தாலும் ஒரு வீரராக ரிஷப் பண்ட் பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும். அதுதான் அவரது அடிப்படை செயல்பாடாகவும் உள்ளது. அதன் காரணமாகவே அவர் இந்திய அணியிலும் இடம் பிடித்து வருகிறார். தனது அடிப்படைத் திறமையிலேயே அவர் இந்த ஆண்டு சொதப்பியிருக்கிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 99 ஆக உள்ளது. இதுவரை ஆடுகளத்தில் தனது கேப்டன்களை விமர்சித்து வந்த சஞ்சீவ் கோயங்காவையே நொந்து போக வைத்திருக்கிறார் ரிஷப் பண்ட்.
இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ரிஷப் பண்ட் மோசமான ஃபார்மில் இருக்கும் நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் தான் கைகொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதை அடுத்து, தோனி, கே.எல். ராகுல் போன்ற சிறந்த வீரர்களை சஞ்சீவ் கோயங்கா அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு தண்டனையாகவே ரிஷப் பண்ட் அமைந்திருக்கிறார் என வேடிக்கையாகவும், விமர்சித்தும் வருகின்றனர் ரசிகர்கள்.
சஞ்சீவ் கோயங்கா, ஆர்பிஎஸ்ஜி குழுமம் (RPSG Group) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக விளையாட்டுகளிலும் முதலீடுகளைச் செய்திருக்கிறது. கால்பந்து அணி ஒன்றையும் சஞ்சீவ் கோயங்கா நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி செயல்பட்டு வருகிறது. பல தொழில்களையும் தொடங்கி சிறப்பாக நடத்தி வரும் சஞ்சீவ் கோயங்கா, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஏமாற்றத்தைச் சந்தித்து வருவதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சிலர் வேடிக்கையாக, "சஞ்சீவ் கோயங்கா ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு தொழில்களில் சம்பாதித்தார். ஆனால் அவரையே ஒருவர் நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். 27 கோடி ரூபாயை ரிஷப் பண்ட்டால் சஞ்சீவ் கோயங்கா இழந்துவிட்டார்'" எனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி எம்.எஸ். தோனி தலைமையில் சரியாக விளையாடாத நிலையில், சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயங்கா சமூக வலைத்தளங்களில் எம்.எஸ். தோனியை விமர்சித்து வந்தார். தனது அணியின் கேப்டனாக இருந்தவரை ஏன் சமூக வலைத்தளங்களில் ஒரு அணியின் உரிமையாளரின் சகோதரர் விமர்சிக்கும் மோசமான நிகழ்வு அப்போது நடந்தது.
அப்போது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி தற்காலிக அணியாக மட்டுமே இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றபோது, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கலைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் பெற்ற அவமானத்துக்கு, 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தார் தோனி.
அதேபோல 2024 ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுலை மைதானத்தில் வைத்து சஞ்சீவ் கோயங்கா திட்டியிருந்தார். அந்த விவகாரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு கே.எல். ராகுல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றதோடு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ரன் குவித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுடன் கைகுலுக்கப் பேச முயன்றார். ஆனால் கே.எல். ராகுல் அவரை தவிர்த்துவிட்டுச் சென்றார். அதை பலரும் சுட்டிக்காட்டி, சஞ்சீவ் கோயங்காவுக்கு கே.எல். ராகுல் பதிலடி கொடுத்ததாகக் கூறியிருந்தனர்.
இவ்வாறாக இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களை சஞ்சீவ் கோயங்கா அவமானப்படுத்தியதும், பின்னர் அவர்களால் அவருக்கு பதிலடி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தன. தற்போது லக்னோ அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்தும் மோசமான ஃபார்மில் இருப்பதால், இதுவும் கோயங்காவுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.