லக்னோ: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன் லக்னோ அணி தரப்பில் 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பெயர் இருக்காது என்றும், அதற்கு உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாயில் நடக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் வரும் 31ஆம் தேதிக்குள் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் 10 அணிகளின் உரிமையாளர்களும் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

ரீடெய்ன் செய்யும் வீரர்களுக்கான ஊதியமாக ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 சர்வதேச வீரர்களை ரீடெய்ன் செய்ய விரும்பினால், அந்த அணியின் பர்ஸ் தொகையில் இருந்து ரூ.75 கோடி கழித்து கொள்ளப்படும். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை தக்க வைத்தால், ரூ.4 கோடி ஊதியமாக அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அணி நிர்வாகங்கள் தரப்பில் 5 வீரர்களை தக்க வைத்து தொகையை வீணடிக்க விரும்பாது என்று பார்க்கப்பட்டது. ஏனென்றால் மெகா ஏலத்தில் ஒரு சில வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். குறிப்பாக இந்திய வீரர்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும். இதன் காரணமாக லக்னோ அணி தரப்பில் வெறும் 3 வீரர்களை மட்டும் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.18 கோடிக்கு தக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் உள்ளூர் வீரர்களான ஆயுஷ் பதோனி மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மோசின் கான் இருவரையும் தலா ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து கேப்டன் கேஎல் ராகுல், ரவி பிஷ்னாய் மற்றும் ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோரை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
3 ஆர்டிஎம் கார்டுகள் இருப்பதால், அவர்களை மெகா ஏலத்தில் வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேஎல் ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கேஎல் ராகுல் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை வாங்குவதற்கு ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.