Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களை ஒதுக்கி வைத்த பாண்டிங்.. கொந்தளித்த திவாரி.. பஞ்சாப் கிங்ஸ் அணியில் என்ன பிரச்சனை?

சண்டிகர்: பஞ்சாப் கிங்ஸ் அணியில் இந்திய வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றம் சுமத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்திய வீரர்களை நம்பாமல் பேட்டிங் வரிசையை மாற்றி இருப்பதாக அவர் சரமாரியாக புகார் கூறியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தது. அந்த அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, ஏலத்தில் புத்தம் புதிய அணி கட்டமைக்கப்பட்டது. அந்த அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

IPL 2025 Manoj Tiwary criticizes Ricky Ponting s treatment of Indian players

இவர்கள் இருவரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஒரு புள்ளியையும் பெற்று, மொத்தம் 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

அந்த அணி சிறப்பாக விளையாடி வரும்போதும், அந்த அணியில் இந்திய வீரர்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா வழக்கம்போல துவக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

அடுத்து மூன்றாம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். நான்காவது மற்றும் ஐந்தாவது வரிசையில் நெஹால் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் விளையாடியிருக்க வேண்டும். ஆனால், நான்காம் வரிசையில் ஃபார்மில் இல்லாத கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். ஐந்தாவது வரிசையில் ஆல்ரவுண்டரான மார்கோ ஜான்சன் விளையாடினார்.

அவர்கள் இருவரும் சொற்ப ரன்களை எடுத்தனர். மேக்ஸ்வெல் 8 பந்துகளில் 7 ரன்களையும், மார்கோ ஜான்சன் 7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் 160 முதல் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், இவர்கள் இருவரும் 15 பந்துகளை வீணடித்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்த நிலையில், இவர்கள் இருவரும் பந்துகளை வீணடிக்காமல் சில பவுண்டரிகளை அடித்து இருந்தால், இன்னும் கூட 20 ரன்கள் கூடுதலாக சேர்த்திருக்க முடியும்.

இது பற்றி விமர்சித்துள்ள மனோஜ் திவாரி, பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய வீரர்களை ஒதுக்கும் காரணத்தாலேயே இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்லாது என தனது கொந்தளிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டு பஞ்சாப் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாது. ஏனெனில் இன்று நான் அவர்களின் பேட்டிங் வரிசையைப் பார்த்தேன். அவர்களின் பயிற்சியாளர் நன்றாக ஆடி வரும் இந்திய வீரர்களான நெஹால் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங்கை பேட்டிங் செய்ய அனுப்பாமல், அவர்களுக்கு பதிலாக வெளிநாட்டு வீரர்களை நம்பி பேட்டிங் செய்ய அனுப்பினார். ஆனால் அவர்கள் தங்கள் பணியை சரியாக செய்ய முடியவில்லை. இந்திய வீரர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இது தொடர்ந்தால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றாலும், கோப்பை வெல்லாது" என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 27, 2025, 11:31 [IST]
Other articles published on Apr 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+