IPL 2025: வெறும் 4 மேட்ச் ஆடிய பவுலருக்கு 14 கோடி சம்பளம் அளிக்கப் போகும் LSG.. ஆடிப் போன அணிகள்
மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான மயங்க் யாதவை 14 கோடி கொடுத்து தக்க வைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை அடுத்து அவர் ஏலத்தில் விடுவிக்கப்பட்டால் வாங்கி விடலாம் என காத்திருந்த மற்ற ஐபிஎல் அணிகளுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்து இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம்.
2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் உள்ளூர் வீரராக இடம் பெற்ற மயங்க் யாதவ் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். அந்த சீசனில் அவருக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டதால் அவரால் மற்ற போட்டிகளில் விளையாட முடியவில்லை. வெறும் நான்கு ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவத்துடன் இந்திய அணியிலும் இடம் பெற்றார் மயங்க் யாதவ்.

சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று மூன்று போட்டிகளில் விளையாடினார். நான்கு ஐபிஎல் போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் மயங்க் யாதவுக்கு 14 கோடி சம்பளம் அளித்து தக்க வைக்க உள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
தற்போது இந்தியாவின் அதிவேக வந்து வீச்சாளராக இருக்கும் மயங்க் யாதவ் விரைவில் இந்திய அணியில் முக்கிய வீரராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அவரது வேகம் பேட்ஸ்மேன்களை திணற வைப்பதாக அவரை பார்த்த அனைத்து முன்னாள் வீரர்களும் கூறி உள்ளனர்.

தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான், மயங்க் யாதவின் முக்கியத்துவத்தை அணி நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி இருப்பதாகவும், அவர் ஏலத்தில் விடுவிக்கப்பட்டால் அவருக்கு எந்த அளவுக்கு ஏலத் தொகை கேட்கப்படும் என்பதை ஊகித்து அவருக்கு 14 கோடி சம்பளம் அளிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications