ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர், மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது.
அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் அணியை தக்க வைத்த போதும், ஏலத்தில் வீரர்களை வாங்கிய போதும் அதிரடி பேட்ஸ்மேன்களாக பார்த்து, பார்த்து தேர்வு செய்தார். ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி என ஐந்து அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அந்த அணி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதில்லை. அவர்களும் ஒன்று ஆமை வேகத்தில் விளையாடுகிறார்கள் அல்லது விரைவாகத் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.
கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதுதான் நடந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்திருந்தனர். அவர்கள் ஆட்டமிழந்த பிறகு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். ஹென்ரிச் கிளாசன் 37 ரன்கள் எடுத்தாலும், அவராலும் கடைசி நேரத்தில் அதிரடியாக சிக்ஸர்களை அடிக்க முடியவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் உயரவில்லை. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது.
இது பற்றிப் பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், "இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் ஒரே மாதிரியான விஷயங்கள் நடப்பதைப் பார்க்கிறேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அந்த அணியின் மிடில் ஆர்டர் முன்னே வந்து பேட்டிங்கை எடுத்துச் செல்வதில்லை. ஒரு நல்ல தொடக்கத்தை வைத்து வேகமாக ஸ்கோரை உயர்த்துவது, பார்ட்னர்ஷிப்களை அமைப்பது, இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் செல்வது ஆகியவற்றை அவர்கள் (மிடில் ஆர்டர்) இன்னும் சரியாகச் செய்யவில்லை. அதை எப்படிச் செய்ய வேண்டும் என அவர்கள் கண்டுபிடிக்கவில்லை."
"ஒவ்வொரு போட்டியிலும் உங்கள் தொடக்க வீரர்களை மட்டுமே நீங்கள் நம்பியிருக்க முடியாது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு பல போட்டிகளில் நன்றாக விளையாடியுள்ளார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அது நடக்காது. இப்போது அவர்களின் மிடில் ஆர்டர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னேற்றம் காண வேண்டும்" என்றார் மைக்கேல் கிளார்க்.