டெல்லி: 2025 ஐபிஎல் தொடரின் இடையே இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவியது. அப்போது மே 7ஆம் தேதி அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பத்து நாட்களுக்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஐபிஎல் தொடங்கிய போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியா வர மறுத்துவிட்டார்.
அப்போது தான் சில சம்பவங்களைப் பார்த்ததாகவும், அதைப் பார்த்த பிறகு இந்தியா வர விரும்பவில்லை எனவும் அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணிக்குத் திரும்ப மறுத்ததால், அந்த அணியும் மோசமான நிலைக்குச் சென்று பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

மே 7 அன்று இரவு தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, வீரர்கள் அவசரகதியில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் தான் மீண்டும் இந்தியா வங்கதேசம் வர மறுத்தது சரியான முடிவுதான் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி மிட்செல் ஸ்டார்க் பேசியதாவது: "நான் எனது முடிவு குறித்து திருப்தியுடன் இருக்கிறேன். அந்த சூழ்நிலை எப்படி இருந்தது, அது எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்து நான் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறேன். அதனால்தான் அதற்குப் பிறகு நான் இந்தியா வர மறுத்தேன். எனது கவனத்தைத் டெஸ்ட் போட்டி மீது செலுத்தினேன்.
நான் மீண்டும் ஐபிஎல் ஆடச் செல்லாததற்கான பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை காலம் தான் சொல்லும். அல்லது நான் வராததை அங்கு இருப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை காலம் தான் சொல்லும். ஆனால் அங்கு செல்வது தொடர்பாக எனக்கு சில கேள்விகளும், கவலைகளும் இருந்தன. ஏனெனில் அங்கு என்ன நடந்தது என்பதை நான் பார்த்தேன். அது நான் முடிவெடுப்பதில் முக்கியமானதாக இருந்தது. அங்கே வெவ்வேறு வீரர்களுக்கு, வெவ்வேறு அணிகளுக்கு, வெவ்வேறு முறையான விஷயங்கள் நடந்தன.
தரம்சாலாவில் பஞ்சாப் வீரர்களும் இருந்தார்கள். இரண்டு அணி வீரர்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவம் தான் நேர்ந்தது. ஆனால் பஞ்சாப் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மீண்டும் அந்த அணிக்குத் திரும்பினார்கள். ஜேக் பிரேசர் மற்றும் நான் டெல்லி அணிக்குத் திரும்ப வேண்டாம் என முடிவு செய்தோம்.
இது தனிப்பட்ட முடிவு. இதற்காக என்ன நடந்தாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். ஒரு தொடருக்கு சென்று விட்டோ, ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு பாதியிலோ வெளியே செல்பவன் அல்ல நான். இங்கு வேறு சூழ்நிலை காரணமாகத் தான் விலகினேன்." இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் கூறினார்.