டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் முன்னணி ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கும் போது விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதே சமயம் அந்த அணியில் இதுவரை சரியான வாய்ப்பின்றித் தவித்து வந்த தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஒரு வார காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மே 16 முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்தியாவை விட்டுச் சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வர மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் மிட்செல் ஸ்டார்க்கும் ஒருவர்.

அவரது மேலாளர் ஆஸ்திரேலிய செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்குச் செல்ல மாட்டார் எனக் கூறியிருக்கிறார். இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.
அந்த அணி தற்போது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் வாய்ப்பை உறுதியாக கைப்பற்றலாம். அதன் பிறகு பிளே ஆஃப் போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும்.
மிட்செல் ஸ்டார்க் உலகின் அதிக அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே மிகச் சிறப்பான செயல்பாட்டை அளிப்பார். எனவே, பிளே ஆஃப் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இல்லாதது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவாக இருக்கும்.
அதே சமயம் அந்த அணி தான் விளையாடிய முதல் 10 போட்டிகளில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் 'யார்க்கர் மன்னனாக' விளங்கினார். குறிப்பாக கடைசி ஓவர்களில் தனது யார்க்கரின் மூலம் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்கி வந்தார்.
அவருக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்காதது கடும் விமர்சனத்திற்குள்ளானது. தற்போது மிட்செல் ஸ்டார்க் இல்லாத நிலையில், நடராஜன் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சை முன் நின்று வழி நடத்த வேண்டிய இடத்தில் இருக்கிறார். இது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.