மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக குஜராத அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரிலீஸ் செய்யப்படுவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உறுதியாக கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் கூறியிருப்பதால், சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை பிசிசிஐ வெளிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் யார் யார் ரிடெய்ன் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரிடெய்ன் செய்யப்படுவதற்கு 6 வீரர்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான ஊதியத்தில் பிசிசிஐ ட்விஸ்ட் வைத்துள்ளது.

ஏனென்றால் 6 ரிடெய்ன் வாய்ப்பையும் பயன்படுத்தினால் ரூ.79 கோடியை செலவு செய்ய வேண்டி வரும். அது மெகா ஏலத்தில் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். இதனால் ரிடென்ஷனை குறைத்து கொண்டு, ஆர்டிஎம் கார்டுகளுடன் அணி நிர்வாகங்கள் ஏலத்திற்கு செல்லும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் அணி குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், அடுத்த ஐபிஎல் தொடருக்காக சுப்மன் கில் மற்றும் ரஷித் கான் இருவரும் தக்க வைக்கப்படுவார்கள்.
அதன்பின் சாய் சுதர்சனை 3வது வீரராக ரிடெய்ன் செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மெகா ஏலத்திலும் அவர் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை செல்ல வாய்ப்புகள் உள்ளது. 22 வயது மட்டும் எட்டியுள்ளதால், அவரை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் முட்டி மோதுவார்கள். அதனால் ரூ.11 கோடிக்கு சாய் சுதர்சனை குஜராத் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்று நினைக்கிறேன்.

இவர்களை தொடர்ந்து குஜராத் அணி நிர்வாகம் யாரையும் தக்க வைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ஏனென்றால் முகமது ஷமி, கேன் வில்லியம்சன், டேவிட் மில்லர் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.18 கோடியோ அல்லது ரூ.14 கோடியோ கொடுக்க முடியாது. இவர்களை மெகா ஏலத்தில் குறைந்த தொகைக்கே வாங்க முடியும். ஆனால் குஜராத் அணியால் ஒரு விஷயம் செய்ய முடியும்.
என்னவென்றால் அன்-கேப்ட் வீரர்களாக 2 முக்கியமான வீரர்களை தக்க வைக்க முடியும். ஒருவர் ராகுல் டிவாட்டியா, மற்றொருவர் மோகித் சர்மா. அவர்களுக்கு ரூ.4 கோடி மட்டுமே கொடுத்தால் போதும் என்பதால், மில்லர் அல்லது முகமது ஷமி அல்லது நூர் அஹ்மத் போன்ற வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்காக 2 சீசன்களில் அதிகப்படியான விக்கெட்டுகளை முகமது ஷமி தான் வீழ்த்தி இருக்கிறார். ஒருவேளை அவர் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை வாங்குவதற்கு மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் தீவிரமாக போட்டி போடும். ஏற்கனவே ஷமியை ட்ரேட் செய்வதற்கு நேரடியான பேச்சுவார்த்தையில் மும்பை அணி நிர்வாகம் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த சீசனில் ராகுல் டிவாட்டியாவுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ஊதியம் அளிக்கப்பட்டது. அவரை வாங்க சிஎஸ்கே நிர்வாகமும் தீவிரமாக இருந்தது. இதனால் ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்ய ராகுல் டிவாட்டியா ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகம் தான். இதனால் குஜராத் அணி நிர்வாகம் எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.