மும்பை: சினிமா அல்லது அரசியல் ஆகிய இரண்டில் எதை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கெ நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி பதில் அளித்துள்ளார். அதேபோல் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் ஜெர்சி அணிந்து மீண்டும் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.
2008 முதல் 2021 வரையிலான ஐபிஎல் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற 5 ஆண்டுகளை கடந்த வீரர்கள், அன்-கேப்பிட் வீரர்களாக கருதப்பட்டு வந்தனர். ஆனால் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அந்த அணுகுமுறை கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலமாக தோனியை சிஎஸ்கே அணியால் குறைந்த தொகையில் ரீடெய்ன் செய்து கொள்ள முடியும். இதனிடையே தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, இந்த முடிவுவை எடுப்பதற்கு எனக்கு இன்னும் அதிக கால அவகாசம் உள்ளது. வீரர்களை ரீடெய்ன் செய்வது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.
தற்போதைய சூழலில், முடிவு எடுப்பது நமது கையில் இல்லை. அதனால் பிசிசிஐ விதிகளை வெளியிட்ட பின், நான் முடிவெடுப்பேன். அது நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு சாதகமான தேவையான முடிவாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக தோனியின் அடுத்த சீசனில் விளையாட ஆர்வமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால், தோனி எந்த சூழலிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனிடையே ஓய்வுக்கு பின் தோனியின் பாதை அரசியல் பக்கம் இருக்கும் என்று சில தரப்பினர் கூறி வந்தனர். ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில பாஜக சார்பாக தோனியை அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தோனி, அரசியல் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்துகளையும் கூறியதில்லை.
தற்போது ரசிகர்கள் தரப்பில் பாலிவுட் அல்லது அரசியல்.. இரண்டில் எதை தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, பாலிவுட் தான். அதற்காக என்னை யாரும் நடிக்க சொல்ல வேண்டாம். ஏனென்றால் சினிமா, அரசியல் இரண்டிலும் எனக்கு ஆர்வமில்லை. நீங்கள் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லியதால், பாலிவுட்டை தேர்வு செய்தேன் என்று தெரிவித்தார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.