மும்பை: தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது, 2011ஆம் ஆண்டு தான் சதம் அடித்த நிலையிலும் தனக்கு இந்திய அணியில் இடம் அளிக்க மறுத்தார் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார். அதே சமயம் ரன் குவிக்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததாக கூறி இருக்கிறார்.
அப்போது சரியாக ரன் குவிக்காத கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் சதம் அடித்து இருந்த தனக்கு அடுத்த 14 போட்டிகளுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.

2006-07 ரஞ்சி டிராபி தொடரில் மனோஜ் திவாரியின் பேட்டிங் சராசரி 99.5 என்பதாக இருந்தது. அப்போதே அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2008ல் தான் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அறிமுகம் ஆகியும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார்.
அதன் பின் அவருக்கு அணியில் நிரந்தரமாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் அப்போது என்ன நடந்தது என மனோஜ் திவாரி ஒரு பேட்டியில் விவரித்து இருக்கிறார். மனோஜ் திவாரி கூறிய தகவலை இங்கே பார்க்கலாம்.
"அப்போது தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்திய அணி எப்போதும் கேப்டனின் திட்டத்தின் படி தான் செயல்படும். மாநில அணியில் அப்படி நடக்காது. ஆனால், இந்திய அணியில் எல்லாமே கேப்டன் கையில் தான் உள்ளது. கபில் தேவின் காலத்தில் அவர்தான் இந்திய அணியை நடத்தினார். அடுத்து சுனில் கவாஸ்கர் வந்தபோது அவர் முடிவுகளை எடுத்தார். அதன் பின் முகமது அசாருதீன் அதை செய்தார். அதன் பின் தாதா சவுரவ் கங்குலியும் அதையே செய்தார். ஒரு அதிகாரமிக்க நபர் வரும் வரை இது தொடரும்."
"இப்போது அஜித் அவர்கள் உறுதியான முடிவுகளை எடுக்கிறார். பயிற்சியாளர் முடிவை கூட மறுக்கிறார். ஆனால், நான் சதம் அடித்த போது அடுத்த 14 போட்டிகள் எனக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு வீரர் சதம் அடித்த பின் அணியில் இருந்து நீக்கப்படுகிறார் என்றால் அவர் நிச்சயம் அதற்கான காரணத்தை அறிய விரும்புவார்."
"நான் சதம் அடித்த பின் அனைவரும் என்னை பாராட்டினார்கள். ஆனால், அதன் பின் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. அப்போது நான் உட்பட அனைத்து இளம் வீரரும் இதுபோன்ற சூழ்நிலையில் பேசுவதற்கு அஞ்சினோம். அப்படி செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, எங்களது கிரிக்கெட் வாழ்வு பாதிக்கப்படுமோ என்று அஞ்சினோம்."
"அப்போது விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெற்று இருந்தனர். நான் இடம் பெற்ற தொடருக்கு பின் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் ரன் குவிக்கவில்லை. நான் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகும் பிளேயிங் லெவனில் இடமில்லாமல் இருந்தேன்."
"ஆறு மாதத்தில் 14 போட்டிகளுக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தேன். அந்த நேரத்தில் நீக்கப்பட்ட வீரர் என்பதால் எனக்கு போதிய பயிற்சியும் கிடைக்கவில்லை. நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அதை செய்யவில்லை." இவ்வாறு மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.