மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக உள்ளூர் வீரர்களை தக்க வைக்கும் விதியில் பிசிசிஐ மாற்றத்தை செய்திருந்தது. ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாத வீரர்களை உள்ளூர் வீரராக அறிவிக்கலாம் என்ற அந்த விதிமாற்றம் சிஎஸ்கே அணி தோனியை உள்ளூர் வீரராக தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தான் கொண்டு வரப்பட்டது என பலராலும் வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாக குழுவின் தலைவர் அருண் துமால் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அது தோனிக்காக மட்டும் கொண்டுவரப்பட்ட விதி இல்லை என அவர் கூறி இருக்கிறார். வேறு சில வீரர்களும் அதனால் பயன் அடைவார்கள் என சுட்டிக் காட்டி இருக்கிறார்.

தற்போது 43 வயதாகும் நிலையில் தோனி சிஎஸ்கே அணிக்காக 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். ஏற்கனவே அவர் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டார். எனினும், அவர் 2024 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் மட்டும் இறங்கி பேட்டிங் ஆடினார். அவர் அதிரடியாக பேட்டிங் செய்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மேலும், ஐபிஎல் தொடருக்கான விளம்பரமாகவும் தோனி இருக்கிறார். அவர் பேட்டிங் செய்வதை ஒரே நேரத்தில் பல கோடி மக்கள் நேரலையில் பார்கிறார்கள். அந்த சமயத்தில் டிஆர்பி உச்சத்தை எட்டுகிறது. அவருக்கு வயதானாலும் 2025 ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் அவர் பேட்டிங் செய்தால் அதன் மூலம் அதிக ரசிகர்களை ஈர்க்க முடியும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ, சிஎஸ்கே மற்றும் தோனி ஆகியோர் இணைந்து இந்த விதிமாற்றத்துக்கான திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது.
அதே சமயம், ஒரு சில ஓவர்கள் மட்டும் ஆடும் தோனிக்கு பல கோடி ரூபாய் சம்பளம் அளித்தால் அது மற்ற வீரர்களை வாங்குவதற்கு சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதை தவிர்க்க வேண்டும் என்றால் தோனியை குறைந்த சம்பளத்தில் தக்க வைக்க வேண்டும். அதனால், தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்கும் வகையில் அவரை உள்ளூர் வீரராக அறிவிக்க பிசிசிஐ இந்த விதிமாற்றத்தை செய்து இருப்பதாக கூறப்பட்டது.
அது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் அருண் துமால் - இடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் இதுதான் - "ஒரு போட்டிக்காக திட்டமிடுதல், எதிர் அணியை வீழ்த்த வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றில் தோனியை விட சிறந்த வீரர் ஒருவர் இல்லை. அவர் உள்ளூர் வீரரோ அல்லது சர்வதேச வீரரோ ஒவ்வொரு அணியும் அவரை ஏலத்தில் வாங்குவதற்கு போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளூர் வீரர் என்ற விதி தோனிக்காக கொண்டுவரப்பட்டது என நான் நினைக்கவில்லை."
"இந்திய அணியில் பல இளைஞர்கள் இடம் பிடிக்கிறார்கள். அதனால், பல மூத்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் இப்போதும் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். பியுஷ் சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் இப்போதும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அணியை விட்டு விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார்கள்." என கூறினார்.