சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலமாக செயல்பட்ட தோனி, கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என ரசிகர்கள் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில், அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது உறுதியாகி இருக்கிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கிறோம் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டு இருந்தன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டு இருந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

அவர் அன்கேப்டு (Uncapped) வீரராக 4 கோடி ரூபாய்க்கு தக்க சிஎஸ்கே அணியால் வைக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் குறைந்த சம்பளத்துக்கு தக்க வைக்கப்பட்டு இருப்பதன் நோக்கமே அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதுதான் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தோனி சில போட்டிகளில் தான் ஆடுவார். அதிலும் அவர் பேட்டிங் மட்டுமே செய்வார் எனக் கூறப்படுகிறது. தோனி ஏன் 43 வயதிலும் ரிஸ்க் எடுத்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும்? இது பற்றி சிஎஸ்கே ரசிகர்கள் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியை வீழ்த்திய ஆர்சிபி அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பை வென்றது போல தலைகால் புரியாமல் அதை கொண்டாடினர்.
அந்த போட்டி முடிந்த பின் நீண்ட நேரம் சிஎஸ்கே வீரர்கள் கை குலுக்குவதற்காக வரிசையில் நின்று இருந்தனர். ஒரு ஆர்சிபி வீரர் கூட அதை கவனிக்கவில்லை. அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தனர். அதனால் கை குலுக்குவதற்காக வரிசையில் நின்றிருந்த தோனி பொறுமை இழந்து ஓய்வறைக்கு சென்று விட்டார். அப்போது தோனி ஆர்சிபி அணி மீது அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று தரவேண்டும் என்பதோடு, ஆர்சிபி அணியை இரண்டு லீக் போட்டிகளிலும் வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் தோனி 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வந்திருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இது உண்மையா? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், தோனி ஐபிஎல் கோப்பை வென்ற பின் தான் ஓய்வு பெறுவார் என்றும், தனது கடைசி போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் தான் ஆடுவார் என்றும் சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்காகவே அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வந்துள்ளார் என கூறுகின்றனர். சிஎஸ்கே அணி விக்கெட் கீப்பராக வேறு வீரரை தேர்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.