சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் இழந்த பெருமையை மீட்கும் விதமாக 2025 ஆம் சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் சிஎஸ்கே அணி இருக்கின்றது.
இதற்காக பல்வேறு மாற்றங்களை அந்த அணி செய்ய உள்ளது. எனினும் மெகா ஏலம் வர இருப்பதால் சிஎஸ்கே அணியின் காம்பினேஷன் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக சிஎஸ்கே அணி மெகா ஏலம் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது.

இதேபோன்று ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டும் மூன்று வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்ட் மூலம் மீண்டும் தேர்வு செய்யும் முறையும் கொண்டு வாருங்கள் என சிஎஸ்கே வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தோனிக்கு தற்போது 43 வயது ஆகிறது. இதனால் தோனி கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் வயதான வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடிவிட்டு பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைக்கும் சூழலில் தோனி அணிக்காக மிகப்பெரிய தியாகம் ஒன்று செய்ய இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஏலத்தில் தோனி தன்னுடைய ஊதியத்தை குறைத்துக் கொண்டு ஜடேஜாவுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
இந்த சூழலில் மெகா எலத்திற்கு செல்லும் போது அணிக்கு பணம் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சம்பளத்தை பாதியாக மீண்டும் குறைக்க தோனி முடிவெடுத்து இருக்கிறார். இதனால் தம்மை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரராக கருதி சம்பளத்தை குறைத்துக் கொள்ள தோனி முடிவெடுத்து இருக்கிறார்.
இதனால் தோனியை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரராக கருத வேண்டும் என சிஎஸ்கே ஐபிஎல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் தோனியை சிஎஸ்கே அணி குறைந்த விலைக்கு தக்க வைத்துக் கொண்டு எஞ்சி இருக்கும் பணத்தை வேறு ஏதும் இளம் வீரருக்காக பயன்படுத்த முடிவு எடுத்திருக்கிறது.